சவூதி அரேபியாவில் உம்ரா புனித பயணம் சென்று, பேருந்து விபத்தில் பலியான 45 இந்தியர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 9 பேர் சிறுவர்கள் என்றும் தெரிய வந்தது. மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்த விபத்தில் பலியான சோகமான தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவிலிருந்து புனித பயணம்:
உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் சவூதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு புனித பயணம் சென்று வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், ராம்நகரைச் சேர்ந்த ஷேக் நசிருதீன் (70) மற்றும் அவரது மனைவி அக்தர் பேகம் (62) ஆகியோர், தங்கள் பிள்ளைகள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த உறவினர்கள் உட்பட 54 பேர் கொண்ட குழுவினர் கடந்த நவ.9 அன்று உம்ரா புனித பயணத்திற்காக சவூதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு சென்றிருந்தனர்.
சவூதியில் விபத்து:
ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் முதலில் மெக்காவிற்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து நவ,16 அன்று இரவு மதீனாவுக்கு புறப்பட்டனர். இதற்காக ஒரு பேருந்தை ஏற்பாடு செய்து அதில் 46 பேர் சென்று கொண்டிருந்தனர்.
மீதமுள்ள 8 நபர்களில் 4 பேர் ஏற்கனவே மதீனாவுக்கு காரில் சென்றனர். 4 பேர் மெக்காவிலேயே இருந்தனர். இந்நிலையில் நவ.16 அன்று அமீரக நேரப்படி நள்ளிரவு 12 மணியளவில் 46 பேர் சென்ற பேருந்து மீது, டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
45 பேர் உயிரிழப்பு:
விபத்து நடந்தவுடன் பேருந்தில் தீ பற்றிக்கொண்டது. இதனால் பேருந்து முழுவதுமாக தீப்பற்றி எரிந்து, சம்பவ இடமே கரும்புகையாக காட்சியளித்தது. அந்நேரத்தில் பேருந்தில் இருந்தவர்கள் தூங்கிக்கொண்டிருந்ததால், தீயில் கருகி 45 பேர் உயிரிழந்தனர்.
ஒருவர் உயிர்பிழைப்பு:
முகமது அப்துல் சோயிப் என்ற நபர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டார்.
உயிர் பிழைத்த சோயிப், தூக்கமின்மை காரணமாக ஓட்டுநருக்கு அருகே அமர்ந்திருந்தால் உயிர் தப்பியதாக கூறினார். டீசல் லாரி மீது பேருந்து மோதி தீப்பற்றியதும் அவர் வெளியே குதித்து தப்பியுள்ளார்.
ஒரே குடும்பத்தினர் உயிரிழப்பு:
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வித்யா நகரைச் சேர்ந்தவர் நஜிருதீன். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவரது குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் தான் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். நஜிருதீன், அவரது மனைவி, அவர்களது மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் என 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும் இறந்துள்ளனர். இதனால் இவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தூதரக அதிகாரிகள்
இதற்கிடையே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த தகவல் அறிந்ததும் ரியாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
மேலும் ஜெட்டா மற்றும் மதீனாவில் உள்ள இந்திய துணைத்தூதரக ஊழியர்களும் அங்கே விரைந்து சென்றனர். அவர்கள் மீட்புப்பணிகளை மேற்பார்வையிட்டனர். பின்னர் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் தகவல் தெரிவிக்கும் பணிகளை தொடங்கினர்.
இந்த பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு மையமும் திறக்கப்பட்டது.
ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் அனைத்து உதவிகளும் செய்து வருவதாகவும், இந்திய அரசும் சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறினர்.
இரங்கல்:
யாத்திரையை முடித்துக்கொண்டு நவ.23 அன்று சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்திற்கு இந்திய பிரதமர், தமிழக முதலமைச்சர், தெலுங்கானா முதலமைச்சர், அமீரக வெளியுறவு அமைச்சகம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருணைத்தொகை:
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சம்
கருணைத்தொகை வழங்கப்படுவதாக தெலுங்கானா முதலமைச்சர் திரு. ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
சவூதியில் நல்லடக்கம்:
சவூதி அரேபியாவின் மதீனா அருகே நவம்பர் 16 அன்று பேருந்து விபத்தில் உயிரிழந்த 45 பயணிகளின் இறுதிச் சடங்குகள் நவம்பர் 21, 2025 அன்று நடைபெற்றது.
இறுதி தொழுகை மஸ்ஜித்-ஏ-நபவி-விலும், நல்லடக்கம் ஜன்னத்-உல்-பக்கி-லும் நடைபெறவுள்ளது. உயிரிழந்தவர்களின் 35 குடும்ப உறுப்பினர்கள் ஹைதராபாத்தில் இருந்து சவூதி வந்து, டிஎன்ஏ மாதிரிகள் மற்றும் ஆவணப் பணிகளை உடனடியாக முடித்துள்ளனர்.
தெலங்கானா ஹஜ் கமிட்டி அதிகாரிகள் மற்றும் அமைச்சர் தலைமையிலான தெலுங்கானா குழுவினர் சவூதி அதிகாரிகளுடன் இணைந்து இறுதி நடைமுறைகளை விரைவுபடுத்துகின்றனர். டிஎன்ஏ முடிவுகள் வந்தவுடன் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை மாலைக்குள் நல்லடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
