அல் மக்தூம் விமான நிலையத்தின் சிறப்பம்சங்கள்!

AED 128 பில்லியன் செலவில், ஆண்டுக்கு 260 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில், 70 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக அல் மக்தூம் விமான நிலையம் விரிவாக்கப்படுகிறது.

துபாய் விமான நிலையம்:

உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் (Dubai International Airport), கடந்த ஆண்டு (DXB) 86.9 மில்லியன் பயணிகளைக் கையாண்டது. உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக, அதன் கிரீடத்தைத் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகத் தக்க வைத்துக் கொண்டது. 

இந்த நிலையில் AED 100 பில்லியன் சுற்றுலா முதலீடுகளை ஈர்க்க துபாய் விரும்பியது. அதற்காக விமான நிலையத்தை விரிவாக்க முற்பட்டது. குடியிருப்புகள் மற்றும் நெடுஞ்சாலை ஆகியவை துபாய் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு தடையாக இருப்பதால்,  நகரத்திற்கு வெளியே உள்ள அல் மக்தூம் விமான நிலையத்தை மேம்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அல் மக்தூம் விமான நிலையம்:

துபாயிலிருந்து தென்மேற்கே 20 மைல்களுக்கு மேல் அமைந்துள்ள அல் மக்தூம் விமான நிலையம் 2010 இல் திறக்கப்பட்டது.  சரக்கு விமானங்களுக்காக கட்டப்பட்ட இந்த நிலையம், 2022 இல், 877,400 வணிக பயணிகளைப் கையாண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

துபாய் சவுத் ப்ராப்பர்ட்டீஸ் தலைமை செயல் அதிகாரி விமான நிலையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததும், எதிர்கால வளர்ச்சி  மற்றும் மேம்பாட்டிற்கான முக்கிய மையமாக இந்த மேம்பாடு உருவாகும் என்று எதிர்பார்க்கிறார். மேலும் விமான நிலையம் திறக்கப்பட்டவுடன் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

மதிப்பீடு செலவு:

இந்தப் புதிய முனையம், AED 128 பில்லியன் செலவில் கட்டப்படவுள்ளது. இது தான் அதிக பொருள் செலவில் கட்டப்படுகின்ற விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு பெரியது:

விரிவாக்கப்படுகின்ற இந்த விமான நிலையம், துபாய் சர்வதேச விமான நிலையத்தை விட ஐந்து மடங்கு பெரிதாக இருக்கும்.

பரப்பளவு:

70 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 400 விமான வாயில்களுடன் (aircraft gates) அமைகிறது.

5 விமான ஓடுபாதை:

5 இணையான விமான ஓடுபாதை அமைக்கப்படுவதால், விமானங்கள் புறப்பாடு மற்றும் தரையிறக்கம் தடையின்றி நடைபெறும்.

எதிர்பார்ப்பு: 

ஆண்டுக்கு 260 மில்லியன் பயணிகளையும், 12 மில்லியன் டன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.

கட்டிட வடிவமைப்பு:

லண்டனைச் சேர்ந்த லெஸ்லி ஜோன்ஸ் ஆர்கிடெக்சர் நிறுவனம் இந்த விமான நிலையத்தை வடிவமைத்து வருகிறது.

எப்போது நிறைவடையும்?

விமான நிலையத்தின் முதல் கட்டம் பத்து ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை வாய்ப்புகள் உருவாகும்:

அல்மக்தூம் விமான நிலைய புதிய முனையத்தின் கட்டுமானம் நிறைவடைந்ததும், துபாய் தெற்கில் 500,000 வேலை வாய்ப்புகள் உருவாகலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் தெற்கு நகரம்:

அல்மக்தூம் விமான நிலைய பகுதி துபாய் தெற்கு நகரமாக உருவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“துபாயின் புதிய விமான நிலையத்தைச் சுற்றி  முழு நகரத்தை உருவாக்குவது ஒரு மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதிக்கு வழிவகுக்கும். எதிர்கால சந்ததியினருக்காக நாங்கள் ஒரு புதிய திட்டத்தை உருவாக்குகிறோம். துபாய் உலகின் விமான நிலையம், அதன் துறைமுகம், அதன் நகர்ப்புற மையம் மற்றும் அதன் புதிய உலகளாவிய மையமாக இருக்கும்” என  துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ட்வீட் செய்துள்ளார். 

இத்திட்டத்திற்கு ஏப்ரல் 28, 2024 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.