வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் வந்த டிரம்ப்; இதுவரை நடந்தது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மே மாதம் 15ஆம் தேதி மாலை தனி விமானம் மூலம் கத்தாரிலிருந்து அபுதாபிக்கு வருகை புரிந்தார். அவரை அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகம்மது பின் சாயித் அல் நஹ்யான் நேரில் வரவேற்றார்.

விமானம் அமீரக எல்லைக்குள் நுழையும் போது, இருபுறமும் விமானப்படை ஜெட் விமானங்கள் பாதுகாப்பு வழங்கி வந்தன. விமானம் தரையிறங்கியதும், 21 குண்டுகள் முழங்க முப்படை ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இருநாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

 உச்சி மாநாடு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள்:

அபுதாபியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில், டிரம்பும் அமீரக அதிபரும்  அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பயணத்தின் முக்கிய நிகழ்வுகள்:

இந்த வளைகுடா சுற்றுப்பயணம் மே 13ஆம் தேதி தொடங்கியது. முதல் நிலையாக, டிரம்ப் சவூதி அரேபியாவுக்கு சென்று பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்தார். இருதரப்பாக ராணுவ தளவாடங்கள் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

பின்னர், ரியாத்தில் நடைபெற்ற வளைகுடா-அமெரிக்க உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அடுத்து, கத்தாரில் ஆட்சி தலைவர் ஷேக் தமீம் பின் ஹமத் பின் கலீபாவை சந்தித்து, வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் ஆலோசனைகள் நடத்தினார்கள். அங்கு கூட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கத்தார் ஏர்வேஸ் போயிங் நிறுவனத்திடம் 210 பரந்த உடல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம், சவுதிக்கு $142 பில்லியன் மதிப்பிலான அமெரிக்க ஆயுத விற்பனை ஒப்பந்தம் கையெழுத்தாகின.

சவுதி அரேபியா அமெரிக்காவில் $600 பில்லியன் முதலீடு செய்ய உறுதிமொழி எடுத்துள்ளது.

“சாதனை சுற்றுப்பயணம்” என டிரம்பின் பெருமிதம்:

தோஹாவில் வணிகத் தலைவர்களுடன் நடந்த சந்திப்பின் போது, தனது வளைகுடா பயணத்தின் மூலம் $3.5 முதல் $4 டிரில்லியன் வரை நிதி ஒப்பந்தங்களை திரட்ட முடியும் என டிரம்ப் தெரிவித்தார்.

“இது ஒரு சாதனை சுற்றுப்பயணம். இவ்வளவு மிகப்பெரிய பொருளாதார ஒப்பந்தங்களை திரட்டிய பிற தலைவரைக் காண முடியாது,” என அவர் கூறினார்.

எரிசக்தி துறையில் மிகப்பெரிய முதலீடு!

2035ஆம் ஆண்டுக்குள், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்து எரிசக்தித் துறையில் மட்டும் $440 பில்லியன் முதலீடு செய்ய உள்ளதாக, அமீரக தொழில்துறை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சர் சுல்தான் அல் ஜாபர் உறுதிப்படுத்தினார்.

அபுதாபியில் மிகப்பெரிய AI வளாகம்:

அமெரிக்காவிற்கு வெளியே மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு வளாகத்தை உருவாக்க வளைகுடா நாட்டிற்காக ஐக்கிய அரபு அமீரகமும், அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இது அபுதாபியில் நிறுவப்பட உள்ளது மற்றும் பிராந்திய கணினி சேவைகளை வழங்கும் திறன் கொண்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு தாயகமாக இருக்கும், உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு சேவை செய்யும் திறன் கொண்டது.

செயற்கை நுண்ணறிவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு இந்த வளாகம் ஒரு சான்றாகும் என்று அபுதாபியின் துணை ஆட்சியாளரும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப கவுன்சிலின் (AIATC) தலைவருமான ஷேக் தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான் கூறினார்.

நாட்டின் உயரிய விருது:

காசர் அல் வதானில் அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்  அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் சயீத் விருதை வழங்கினார்.  அமீரகம் மற்றும் அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான  டிரம்பின் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக,  இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

புர்ஜ் கலிபாவில் அமெரிக்க கொடி:

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வருகையைக் குறிக்கும் வகையில், துபாயின் சின்னமான புர்ஜ் கலீஃபா அமெரிக்கக் கொடியின் வண்ணங்களில் ஒளிரச் செய்யப்பட்டது. அதில் ‘அமெரிக்க அதிபரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரவேற்கிறது’ என்ற வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த முக்கிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, டொனால்ட் டிரம்ப் இன்று (சனிக்கிழமை) அமெரிக்காவுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGGED: