சமீபத்திய தரவுகளின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய வெளிநாட்டினரின் எண்ணிக்கை 4.36 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று மூத்த இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 ஆண்டுகளில் அமீரகத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை:
துபாயில் இந்தியா டுடே குழுமம் நடத்திய “Indo-UAE” Conclave-வில் பேசிய துபாய் மற்றும் வடக்கு அமீரக இந்திய தூதர் சதீஷ் சிவன், நாட்டில் புலம்பெயர்ந்த இந்தியர் எண்ணிக்கை விரைவான வளர்ச்சியை எட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 2023-ல் புலம்பெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை 3.89 மில்லியனாக இருந்தது, ஆனால் ஆறு மாதங்களுக்குள், அதாவது டிசம்பர் 2024-ல் அந்த எண்ணிக்கை 4.36 மில்லியனாக அதிகரித்துள்ளது.
பத்து வருடங்களுக்கு முன்பு 2.2 மில்லியனாக இருந்த இந்தியர்களின் எண்ணிக்கை இப்போது 4.36 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது இரு மடங்கு அதிகரிப்பு. மேலும், இந்த எண்ணிக்கை 20 ஆண்டுகளுக்கு முன்பு அமீரகத்தில் மொத்த மக்கள் தொகைக்கு சமமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அமீரகத்தில் உள்ள இந்தியாவின் முதலீடுகள்:
இந்திய வெளிநாட்டினர் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் துபாயில் வாழ்கின்றனர் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்திய தூதர் சஞ்சய் சுதிர் தெரிவித்துள்ளார். இது இந்தியாவிற்கும், அமீரகத்திற்கும் உள்ள உறவை அடிக்கோடிட்டு காட்டுகிறது. என்று சுஞ்சய் சுதிர் கூறியுள்ளார்.
மேலும் எங்கள் முதல் படகுகள் இங்குள்ள போர்ட் ரஷீத்தில் தரையிறங்கின நாளிலிருந்து இன்று வரை இங்குள்ள எங்கள் இந்திய சமூகம் 4.3 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது, அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் துபாயில் வசிக்கிறார்கள் என்பதே உண்மை என்று சுஞ்சய் சுதிர் கூறியுள்ளார்.
அமீரகத்தில் இந்தியாவினுடைய முதலீடுகள் பெரும்பாலும் துபாயில் தான் இருக்கின்றன என்றும், துபாய் மற்றும் ஒட்டுமொத்த அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் பணியாளர்களில், குறிப்பாக தலைமை நிதி அதிகாரிகள்(CFO) போன்ற உயர் பதவிகளில் இந்தியர்கள் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர் என்றும் கூறினார். இது அமீரக பொருளாதாரத்தில் இந்தியர்களின் கணிசமான பங்களிப்பை வெளிப்படுத்துகிறது, என்று சுதிர் குறிப்பிட்டார்.
