அபுதாபியில் நர்சரி, கேஜி மாணவர்களுக்கு வாரத்திற்கு 4 மணிநேரம் அரபு மொழி பாடம் கட்டாயம்

அபுதாபி கல்வி ஆணையம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனியார் மற்றும் கல்வி கூட்டாண்மை பள்ளிகளில் உள்ள மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு (நர்சரி முதல் இரண்டாம் மழலையர் பள்ளி வரை) வாரத்திற்கு 4 மணிநேரம் அரபு மொழி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வாராந்திர அரபு மொழிப் பாட நேரம், 2026-2027 கல்வியாண்டு முதல் 5 மணி நேரமாக அதிகரிக்கப்படும்.

இந்த உத்தரவு, 2025-2026 கல்வி ஆண்டின் முதல் செமஸ்டரில் இருந்து தொடங்கும் என்று கல்வி மற்றும் அறிவுத் துறை (ADEK) உறுதிப்படுத்தியுள்ளது.

கல்வி மற்றும் அறிவுத் துறையின் முக்கிய நோக்கம்:

அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தைகளாக இருந்தாலும் சரி, அல்லது புதிதாக அரபு மொழியைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகளாக இருந்தாலும் சரி,  அவர்களின் மொழி வளர்ச்சிக்கு முக்கியமான காலகட்டத்தில் சீரான, உயர்தரக் கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதே நோக்கமாகும்.

இந்த அரபிக் மொழிப் பயிற்சியானது இரண்டு வழிகளில் வழங்கப்படுகிறது:

அரபு மொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, தங்கள் மொழி அறிவை மேலும் மேம்படுத்திக் கொள்ள விரும்புபவர்களுக்கானது, ஒரு வழி ஆகும்.

அரபியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களுக்கும், புதிதாகக் கற்பவர்களுக்கும் அடிப்படைத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கானது, மற்றொரு வழி ஆகும்.

அரபு மொழி மிகவும் சுவாரஸ்யமூட்டும் விதமாக விளையாட்டு, கதை சொல்லுதல், பாடல்கள் மற்றும் நேரடி அனுபவங்கள் மூலம் மொழி வகுப்பறையில் உயிரோட்டமுள்ளதாகவும், ஊடாடும் வகையிலும் இருக்கும். இதை நிறைவேற்றுவதற்காக, சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் நவீன கற்றல் வளங்கள் பயன்படுத்தப்படும். மேலும், பள்ளிகள் பெற்றோர்களையும் இதில் சேர்த்து, அரபி தொடர்பான நிகழ்வுகள், தகவல்களும், வீட்டிலும் பள்ளியிலும் பயன்படுத்தக்கூடிய கருவிகளும் வழங்க ஊக்குவிக்கப்படுகின்றன. இதன் மூலம் குழந்தைகள் மட்டுமல்ல, குடும்பத்தினரும் அரபி கற்றலில் பங்கு பெறும் சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.

தற்போது, மழலையர் பள்ளிகளில் அரபு கற்பிப்பதற்கான விதிகளை ADEK (அபுதாபி கல்வி மற்றும் அறிவுத் துறை) அமைப்பு வகுக்கிறது. ஆனால், பள்ளிகளில் அரபு கற்பிப்பதற்கான விதிகளை கல்வி அமைச்சகம் நிர்ணயிக்கிறது. இந்தத் திட்டம், மழலையர் பள்ளிகளில் அரபு மொழி கற்பிக்கும் முறைக்கும், பள்ளிகளில் அரபு மொழி கற்பிக்கும் முறைக்கும் இடையே உள்ள இடைவெளியை நீக்குகிறது. குழந்தைகள் சிறு வயதில் இருந்து அரபி மொழியை சிறப்பாகக் கற்றுக்கொள்ளவும், கலாசார அடையாளத்தை பாதுகாக்கவும் வழிவகுக்கும் ஒரு விரிவான திட்டத்தின் பகுதியாகும்.

அரபு மொழி கற்றலை வலுப்படுத்துதல்:

அபுதாபியின் இந்த நடவடிக்கை, சிறுவயதில் இருந்தே அரபி மொழி கற்றலை வலுப்படுத்தும் ஒரு நாடு முழுவதும் நடைபெறும் ஒரு திட்டத்தின் பகுதியாகும். UAE முழுவதும் இதுபோன்ற திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. 

உதாரணமாக துபாயில், கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டு ஆணையம் (KHDA) இந்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி ஒரு புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதில், சிறு வயதிலேயே (பிறந்த நாளிலிருந்து 6 வயது வரை) உள்ள குழந்தைகளுக்கு அரபி கற்றல் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. இது தனியார் பள்ளிகளுக்கும், ஆரம்ப கல்வி மையங்களுக்கும் பொருந்தும்.

ஷார்ஜாவில், நவம்பர் 2024 இல், ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்கள், அனைத்து அரசு மழலையர் பள்ளிகளில் அரபு மொழியை மட்டுமே கற்பிக்கும் மொழியாகப் பயன்படுத்த உத்தரவிட்டார். மொழி மட்டுமல்லாமல், குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான உணவு மற்றும் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வுக்கும் ஆரம்பக் கல்வி முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

TAGGED: