இந்த வாரத்தில் நடைபெற்ற முக்கியமான செய்திகள்!
இந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகளை இத்தொகுப்பில் காணலாம்.
உலக விளையாட்டு உச்சி மாநாடு!
உலகெங்கிலும் உள்ள முன்னணி விளையாட்டு வீரர்கள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்கும் உலக விளையாட்டு உச்சி மாநாடு 2025 துபாயில் டிச.29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் ஜூன் 29ஆம் தேதி அன்று தெரிவித்தார்.
மதீனாத் ஜுமேராவில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை துபாய் விளையாட்டு கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது.
சமூகங்களை ஒன்றிணைப்பதிலும், எதிர்கால சந்ததியினரை விளையாட்டில் ஊக்குவிப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், உள்ளூர், பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில் திறமைகளை வளர்ப்பதிலும், விளையாட்டின் பங்கை வலுப்படுத்துவதிலும் இந்த உச்சி மாநாடு உலகளாவிய தளத்தை வழங்கும் என துபாய் இளவரசர் X பதிவில் தெரிவித்துள்ளார்.
மிகக்கடுமையான கோடை காலம்:
அமீரகத்தில் “ஜம்ரத் அல் கைத்” எனப்படும் வெப்ப அலை வீசும் மிகக் கடுமையான கோடை காலம் ஜூலை 3 அன்று தொடங்கியது. இதன் காரணமாக ஆகஸ்ட் 10 வரை வெப்பநிலை 50°C-க்கு மேல் வெப்பம் இருக்கும் என அமீரக வானியல் மைய தலைவர் தகவல்.
ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 10 வரையிலான காலகட்டத்தில் வறண்ட வானிலை நிலவும், வெப்பநிலை அதிகரிக்கும், காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கடுமையான வெப்பம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், அதிகம் தண்ணீர் குடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விமான டாக்ஸி!
துபாயின் முதல் விமான டாக்ஸியின் சோதனை ஓட்டத்தை ஜோபி ஏரியல் நிறுவனம் மற்றும் RTA இணைந்து வெற்றிகரமாக முடித்துள்ளது. 2026 முதல் விமான டாக்ஸி பயன்பாட்டிற்கு வருமென கூறப்படுகிறது. இது வழக்கமான ஹெலிகாப்டரை விட 100 மடங்கு சத்தம் குறைவானது. இது மணிக்கு 320 கி.மீ. வேகம் வரையும், 450 கிலோ வரை எடையையும் சுமந்து செல்ல முடியும்.
அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஜோபி ஏவியேஷனுடன் இணைந்து RTA இந்த புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. இதுகுறித்து துபாய் இளவரசர் X பதிவில், ‘பயண நேரங்களை குறைக்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் இந்த புதிய முயற்சி அமீரகத்தின் பரந்த தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதி’ என்று கூறினார்.
மகிழ்ச்சியான மனப்பான்மைக்கு கிடைத்த விருது!
பணியில் சிறந்து விளங்குதல், பொதுமக்களுடன் மகிழ்ச்சியான மனப்பான்மையுடன் நடந்து கொள்ளுதல் போன்ற முன்மாதிரியான செயல்களுக்காக பாதுகாப்பு காவலர் அம்மார் பகதூருக்கு SIRA பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது இவர் உற்சாகமுடன் செயல்படும் வீடியோக்கள் வைரலாகி, சமூக ஊடகங்களில் அனைவரையும் கவர்ந்தது. இதனைத் தொடந்து ஜூன் 3 அன்று நடைபெற்ற விழாவில் அம்மார் பகதூர்க்கு Medal of DEVOTION என்ற SIRA பதக்கம் வழங்கப்பட்டது.
நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் கடமையை செய்தல், மற்றவர்களின் நலனுக்காக தனிப்பட்ட தியாகங்களைச் செய்தல் நெருக்கடியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
நினைவு நாயணம் வெளியீடு!
அமீரக முன்னாள் அதிபர் மாண்புமிகு சயீத் மற்றும் அமீரக முன்னாள் பிரதமர் மாண்புமிகு ரஷீத் அவர்களை கௌரவிக்கும் வகையில் தங்கம் & வெள்ளி நினைவு நாணயங்களை அமீரக மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
தங்க நாணயத்தின் ஒரு பக்கத்தில் இரு தலைவர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் தேசிய சின்னம் மற்றும் அமீரக மத்திய வங்கி என்று அரபு மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.
வெள்ளி நாணயத்தின் ஒரு பக்கத்தில் இரு தலைவர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் தேசிய சின்னம் அமீரக மத்திய வங்கி என்று அரபு மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு “நினைவு நாணயம்” என்ற சொற்றொடர் இடம் பெற்றிருக்கும்.
40 கிராம் எடை மற்றும் 40 மிமீ விட்டம் கொண்ட தங்க நாணயத்தை அபுதாபியில் உள்ள அமீரக மத்திய வங்கியின் தலைமையகத்திலும், 50 கிராம் எடை மற்றும் 50 மிமீ விட்டம் கொண்ட பிரத்யேக வெள்ளி நாணயத்தை அமீரக மத்திய வங்கியின் வலைத்தளத்தில் இருந்து மட்டுமே வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சயீத் மற்றும் ரஷீத்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அமீரக மத்திய வங்கி இந்த நாணயங்களை (CBUAE) வெளியிட்டுள்ளது.
சொந்தமாக முதல் வீடு வாங்க புதிய திட்டம்!
அமீரகத்தில் வீடு இல்லாதவர்கள் சொந்த வீடு வாங்க 18 ஆண்டுகள் தவணையுடன் அதிகபட்சம் AED 5 மில்லியன் வரை கடன் வழங்கும் புதிய திட்டத்தை அமீரக நிலத்துறை அறிவித்துள்ளது.
இதற்கு வீடு இல்லாதவர்கள், முதல் முறையாக சொந்த வீடு வாங்குபவர்களாக இருக்க வேண்டும், 18 அல்லது அதற்கு மேல் வயதுடையவர்களாக இருக்க வேண்டும், எமிரேட்ஸ் ஐடி வைத்திருக்க வேண்டும், வீட்டின் மதிப்பு AED 5 மில்லியன் அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும்.
துபாய் நிலத் துறை (DLD) மற்றும் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து இந்தத் திட்டத்தை 13க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், 5 வங்கிகள் மற்றும் பங்கீட்டாளர்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளன.
