ஷார்ஜாவின் கோர்பக்கானில் சாலை விதியை மீறி வந்த, வாகனத்தால் மனதளவில் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனை, ஷார்ஜா காவல்துறை ஆறுதல் கூறி மீட்டனர்.
சம்பவம் நடந்தது எப்படி?
ஷார்ஜாவின் கோர்பக்கான் பகுதியில் பாதசாரிகள் சாலையை கடந்து கொண்டிருக்கும் போது, 7 வயது சிறுவன் தனது தாயுடன் கடந்து கொண்டிருந்தான். சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்த போது ஒரு வாகனம் சிறுவனுக்கு முன் வேகமாக கடந்து சென்றது.
இதனால் அதிர்ச்சியுடன் அச்சமடைந்து, மனதளவில் பெரிதும் பாதிப்படைந்த சிறுவன் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்துள்ளான். தாய் அறிவுரை கூறியும் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்துள்ளான். இந்நிலையில், சிறுவனின் நிலை குறித்து தாய் ஷார்ஜா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையின் மனநல ஆதரவு!
இதனைத்தொடர்ந்து சிறுவனின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் உரையாடல் மூலம் மனநல ஆதரவை வழங்கினர். அதிகாரிகள் சிறுவனுக்கு சிறிய பரிசுகளையும் அளித்து, அவனது நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப ரோந்து வாகனத்தில் வெளியே அழைத்துச் சென்றனர்.
இது குறித்து கர்னல் அல் யமாஹி, “சிறுவனின் பாதுகாப்பை மீட்டெடுப்பதும், அவனது சுற்றுச்சூழலில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதும் எங்கள் நோக்கமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
விதிமீறிய ஓட்டுநர் மீது நடவடிக்கை
மேலும் சிவப்பு விளக்கை மதியாமல் விதிமீறலில் ஈடுபட்ட ஓட்டுநர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஓட்டுநரின் வாகனத்தை 30 நாட்களுக்கு பறிமுதல் செய்துள்ளனர். வாகனத்தில் செல்வோர் சமூகத்தினரின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
