ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும், முப்படைகளின் சுப்ரீம் கமாண்டருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், துபாயின் பட்டத்து இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களை லெப்டினன்ட் ஜெனரலாகப் பதவி உயர்த்தி கூட்டாட்சி ஆணை பிறப்பித்துள்ளார்.
ஷேக் ஹம்தான்:
துபாயில் கடந்த 1982-ம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் மற்றும் மாண்புமிகு ஷேக்கா ஹிந்த் பிந்த் மக்தூம் பின் ஜுமா ஆகியோருக்கு 2-வது மகனாக மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் பிறந்தார்.
துபாயில் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்து பட்டப்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். உலகின் சிறந்த இராணுவ பயிற்சி நிலையங்களில் ஒன்றான ராயல் மிலிட்டரி அகாடமி சாண்ட்ஹர்ஸ்டில் பட்டம் பெற்றார்.
பாதுகாப்புத்துறை அமைச்சராக ஹம்தான்:
துபாய் பட்டத்து இளவரசராக சிறப்புடன் பணியாற்றி வந்த இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமீரக துணை பிரதமர் பதவியும், பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது. பதவியேற்றதில் இருந்து, ஷேக் ஹம்தான் பிராந்திய மற்றும் உலகளாவிய சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்புத் துறையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
பிப்ரவரி 2025-இல், அவர் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் (IDEX) பங்கேற்று, கஜகஸ்தான் மற்றும் குவைத் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து பயிற்சி, ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்துப் பேசினார்.
கடந்த மார்ச் மாதம், ரமலான் சமயத்தில், அபுதாபியில் உள்ள சுவைஹான் பயிற்சி மையத்தில் தேசிய சேவை வீரர்களுடன் இஃப்தார் விருந்தில் கலந்துகொண்டார். அப்போது அவர்களை பாராட்டி, தேசிய சேவையை ஒற்றுமை மற்றும் பலத்தின் தூண் என்று குறிப்பிட்டார்.
அல் தாஃப்ரா விமான தளத்திற்குச் சென்று இராணுவப் பிரிவுகளை ஆய்வு செய்த அவர், அங்குள்ள தயார்நிலையை மதிப்பிட்டு, ஐக்கிய அரபு அமீரக விமானப்படை மற்றும் வான் பாதுகாப்புப் படையின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை எடுத்துரைத்தார்.
லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு:
அமீரக துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பதவிகளை ஏற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் ஜூலை 29 அன்று அமீரக அதிபரும், முப்படைகளின் சுப்ரீம் கமாண்டருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், துபாய் பட்டத்து இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுக்கு அமீரக ஆயுதப்படையில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமீரக ராணுவத்தை பொருத்தவரை உயர் அதிகாரிகள் பிரிவில் இரண்டாம் லெப்டினன்ட் நிலையில் இருந்து ராணுவ ஜெனரல் வரை மொத்தம் 10 நிலைகள் உள்ளன. தற்போது மேஜர் ஜெனரலில் இருந்து 2-ம் நிலை உயர் பதவியான லெப்டினன்ட் ஜெனரலாக பட்டத்து இளவரசருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு வெளியிடப்பட்ட நிலையில் அமீரக தலைவர்கள் துபாய் இளவரசருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
