அமீரகத்தில் இந்த வாரம் முழுக்க நடைபெற்ற நிகழ்வுகள், வெளியான முக்கிய அறிவிப்புகள் ஆகியவற்றை இத்தொகுப்பில் காணலாம்.
டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பாராட்டு விழா!
2024 – 25ஆம் ஆண்டுகளில் சாலை விதிகளை கடைப்பிடித்தல், வாகனத்தை சுத்தமாக பராமரித்தல், இழந்த பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தல் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட 2,172 துபாய் டாக்ஸி ஓட்டுநர்களை துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) கௌரவித்தது.
RTA-வின் ‘சாலை தூதர்கள்’ முயற்சியின் ஒரு பகுதியாக சிறப்பாக பணி செய்த டாக்ஸி ஓட்டுநர்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்ட டாக்ஸி ஓட்டுநர்களை RTA-வின் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது பஹ்ரோஸ்யான் பாராட்டினார்.
அவர் கூறுகையில், “இந்த அங்கீகாரம் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்பட்ட ஓட்டுநர்களை உள்ளடக்கியது. இந்தத் திட்டம் ஓட்டுநர்களிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, சேவைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது” என்று கூறினார்.
துபாய்-க்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!
2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் துபாய்க்கு 9.88 மில்லியன் சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 6% அதிகமாகும் என பொருளாதாரம் & சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள தரவுகளை சுட்டிக்காட்டி துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகின் முதல் மூன்று உலகளாவிய சுற்றுலா தலங்களில் துபாயை நிலைநிறுத்த வேண்டும் என்ற முகமது பின் ரஷீத் அவர்களின் தொலைநோக்குப் பார்வையை இந்த மைல்கல் பிரதிபலிக்கிறது என துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!
இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு திர்ஹமுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23.91 ஆக சரிந்துள்ளது. வரும் காலங்களில் திர்ஹமுக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மீது அமெரிக்கா விதித்த கூடுதல் வரி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறுவது, அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பு போன்ற பொருளாதார காரணிகளால் உலக நாணயங்களுக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவதாக கூறப்படுகிறது.
இதனால் அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் தங்களது குடும்பத்திற்கு பணம் அனுப்ப இது மிகவும் சாதகமான நேரம் என கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தை விரும்பும் தொழிலாளர்கள்!
வேலைவாய்ப்பு, வேலை நேரம், வளர்ச்சி உள்ளிட்ட 10 காரணிகளில் தொழிலாளர்கள் பணி செய்வதற்கு 2025-இல் முதன்மையான நாடக அமீரகம் உள்ளது என்று IMD World Competitiveness Center குறிப்பிட்டுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, முதலீடு செய்தல் மற்றும் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் திறமையான நிபுணர்களை ஈர்க்கும் நாடக அமீரகம் இருப்பதாலும், பொருளாதார அமைப்பை வளர்ப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாகவும் தொழிலாளர்களுக்கு சிறந்த நாடக அமீரகம் உள்ளது.
சிறந்த அடையாளச் சின்னங்களில் ஷேக் சயீத் கிராண்ட் மசூதி
2025-இல் உலகின் சிறந்த 25 அடையாளச் சின்னங்களின் தரவரிசையை TripAdvisor வெளியிட்டுள்ளது. இதில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் மசூதி 8வது இடத்தை பிடித்துள்ளது.
அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் மசூதி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு இடங்கள் முன்னேறி 8வது இடத்தை பிடித்துள்ளது. வெள்ளை குவிமாடங்கள், அருகே உள்ள குளங்கள், அரபு தேசத்தின் கலைநயம், அமைதியான சூழல் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் ஆகியவை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை இந்த மசூதி ஈர்க்கிறது.
