அமீரக குடியிருப்பாளர் விசா இல்லாமல் 18 நாடுகளுக்கு பயணிக்க முடியுமா?

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் விசா இன்றி மற்றும் ஆன் அரைவல் விசா மூலம் பயணிக்கக்கூடிய நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

விடுமுறையைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், பாஸ்போர்ட்டை பொறுத்து சில நிபந்தனைகள் இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். சில நாடுகளுக்கு நிபந்தனைகளுடன் கூடிய விசா-ஆன்-அரைவல் வசதியும் உள்ளது.

விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய நாடுகள்:

 அர்மேனியா

அமீரக விசா அல்லது குடியுரிமை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் அர்மீனியாவிற்கு விசா இல்லாமல் செல்லலாம்.

கென்யா

கென்யா இப்போது விசா இல்லாமல் பயணிக்க அனுமதித்துள்ளது. இருப்பினும், நீங்கள் பயணம் செய்வதற்கு குறைந்தது 72 மணிநேரத்திற்கு முன்பே, மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorisation – ETA) ஆன்லைனில் பெறுவது அவசியம்.

கிர்கிஸ்தான்

கிர்கிஸ்தான் நாட்டுக்கான விசா-இல்லாத பயணம், வந்தவுடன் விசா பெறுதல், மற்றும் எளிமையான பயண ஏற்பாடுகள் உங்கள் நாட்டைப் பொறுத்து மாறுபடும். அமீரக குடியிருப்பாளர்கள் கிர்கிஸ்தானுக்குள் 60 நாட்கள் வரை விசா இல்லாமல் நுழையலாம், அதே நேரத்தில் இந்திய குடிமக்கள் கிர்கிஸ்தானுக்குள் நுழைய மின்னணு அல்லது பாரம்பரிய விசாவைப் பெற வேண்டும்.

செஷல்ஸ்

செஷல்ஸ் செல்வதற்கும் விசா தேவையில்லை. ஆனால், திரும்பும் விமான டிக்கெட், முன்பதிவு செய்யப்பட்ட தங்கும் இடம் மற்றும் பயணத்திற்கான போதுமான நிதி ஆதாரங்கள் இருப்பதைக் காட்ட வேண்டும்.

உஸ்பெகிஸ்தான்

அமீரக குடியிருப்பாளர் விசா வைத்திருப்பவர்கள், உஸ்பெகிஸ்தான் சென்ற தேதியிலிருந்து குறைந்தது 90 நாட்களுக்கு விசா செல்லுபடியாகும். இங்கு 30 நாட்கள் வரை தங்கலாம்.

ஆன் அரைவல் விசா மூலம் பயணிக்கக்கூடிய  நாடுகள்:

அஜர்பைஜான்

அமீரக குடியுரிமை விசா வைத்திருப்பவர்கள், அஜர்பைஜான் விமான நிலையத்தில் ஒரு மாதத்திற்கான சுற்றுலா விசாவை எளிதாகப் பெறலாம்.

ஜார்ஜியா

அமீரக குடியிருப்பாளர்கள், சில விதிவிலக்குகளுடன் 90 நாட்கள் வரை ஆன் அரைவல் விசாவை பெறலாம்.

குவைத்

அனைத்து வளைகுடா நாடுகளின் குடியிருப்பாளர்களும், குவைத்தில் 30 நாட்கள் வரை ஆன் அரைவல் விசாவை பெறலாம்.

சில நிபந்தனைகளுடன் ஆன் அரைவல் விசா  (Visa-on-arrival) மூலம் பயணிக்கக்கூடிய  நாடுகள்:

 கம்போடியா

அமீரக குடியிருப்பாளர்கள், சுற்றுலா அல்லது வணிக நோக்கங்களுக்காக 30 நாட்கள் வரை விசா ஆன் அரைவல் பெறலாம். விமான நிலையத்தில் ஒரு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் குடியேற்ற அட்டையை நிரப்ப வேண்டும்.

இந்தோனேசியா

பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 30 நாட்களுக்கு ஆன் அரைவல் விசா வசதி உள்ளது.

ஜோர்டான்

அமீரக குடியிருப்பாளர்கள் 30 நாட்கள் வரை ஆன் அரைவல் விசாவைப் பெறலாம். இது அவர்களின் நாட்டைப் பொறுத்தது.

மாலத்தீவுகள்

இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களைத் தவிர, மற்ற அனைத்து நாட்டினருக்கும் 30 நாட்கள் சுற்றுலா விசா, வந்தவுடன் வழங்கப்படும். முழுமையான பயணத் திட்டம், பயண அறிவிப்புப் படிவம் மற்றும் தேவையான தடுப்பூசி சான்றிதழ் போன்றவற்றை வழங்க வேண்டும்.

மொரீஷியஸ்

15 குறிப்பிட்ட நாடுகளைத் தவிர, பெரும்பாலான அமீரக குடியிருப்பாளர்கள் 90 நாட்கள் வரை ஆன் அரைவல் விசாவை பெறலாம்.

நேபாளம்

அமீரக குடியிருப்பாளர்கள் 15, 30 அல்லது 90 நாட்கள் ஆன் அரைவல் விசா  பெறலாம்.

ஓமன்

அமீரக குடியிருப்பு விசா, நுழைவு தேதியிலிருந்து குறைந்தது மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் பட்சத்தில், 30 நாட்களுக்கு ஆன் அரைவல் விசாவை பெறலாம். இது உங்கள் பணியை பொறுத்து மாறுபடும்.

சிங்கப்பூர்

அமீரக குடியிருப்பாளர்கள் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் பயணிக்கலாம், ஆனால் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தேவைப்படும்.

இலங்கை

பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆன் அரைவல் விசாவை பெறலாம். ஆனால், பயணம் செய்வதற்கு முன் ஒரு ETA (மின்னணு பயண அங்கீகாரம்) பெறுவது அவசியம்.

தாய்லாந்து

93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா விலக்கு உண்டு. மேலும் 31 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா ஆன் அரைவல் வசதி உள்ளது. எந்த வகையிலும் பயணம் செய்தாலும், தாய்லாந்து வருவதற்கு முன், டிஜிட்டல் பயண வருகை அட்டையை (Digital Travel Arrival Card) பூர்த்தி செய்வது கட்டாயம்.


TAGGED: