2025 – 2026ஆம் கல்வியாண்டில் நர்சரி பள்ளிகள் முதல் சர்வதேச பல்கலைக்கழகங்கள் வரை துபாயில் 25 புதிய கல்வி நிறுவனங்களைத் திறக்கவுள்ளதாக அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
25 புதிய கல்வி நிறுவனங்கள்
துபாயில் உள்ள குடும்பங்கள் விரைவில் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகளை இன்னும் அதிகமாகப் பெறுவார்கள். அந்த வகையில் 2025-26 கல்வியாண்டில் 25 புதிய தனியார் கல்வி நிறுவனங்கள் துபாயில் திறக்கப்படவுள்ளன. இதில் 16 நர்சரி பள்ளிகள், 6 பள்ளிகள் மற்றும் 3 சர்வதேச பல்கலைக்கழகங்கள் அடங்கும் என்பதை அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய கல்வி நிறுவனங்கள் 14,000க்கும் மேற்பட்ட புதிய மாணவர்களுக்கு இடம் அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நர்சரி பள்ளிகளுக்கான பாடத்திட்டங்கள்
நடப்பு கல்வியாண்டில் திறக்கப்படும் 16 புதிய நர்சரிப் பள்ளிகள் மட்டும் 2,400க்கும் மேற்பட்ட மழலை மாணவர்களுக்கு இடமளிக்கிறது. இதில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் UKயின் Early Years Foundation Stage (EYFS) பாடத்திட்டத்தைப் பின்பற்றும். பிற கல்வி நிறுவனங்கள் Creative Curriculum, Montessori மற்றும் Maple Bear திட்டங்களைப் பின்பற்றும். இதனால் தங்கள் குழந்தைகளுக்கான பாடத்திட்டத்தை பெற்றோர் அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.
UK பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள்:
இந்தக் கல்வியாண்டில் திறக்கப்படும் 6 புதிய பள்ளிகளில் ஐந்து பள்ளிகள் UK பாடத்திட்டத்தையும், ஒரு பள்ளி பிரெஞ்சு பாடத்திட்டத்தையும் பின்பற்றும் என அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
- ஸ்போர்ட்ஸ் சிட்டியில் உள்ள GEMS ஸ்கூல் ஆஃப் ரிசர்ச் அண்ட் இன்னோவேஷன்
- சிட்டி ஆஃப் அரேபியாவில் உள்ள விக்டரி ஹைட்ஸ் பிரைமரி ஸ்கூல்
- துபாய் பிரிட்டிஷ் ஸ்கூல் மிரா
- நாட் அல் ஷெபாவில் உள்ள அல் ஃபனார் ஸ்கூல்
- அகாடமிக் நகரில் துபாய் இங்கிலிஷ் ஸ்பீக்கிங் ஸ்கூல்
முடோன் பகுதியில் அமைந்துள்ள லைசீ பிரான்சாய்ஸ் சர்வதேச பள்ளி, பிரெஞ்சு பாடத்திட்டத்தில் கல்வியை வழங்கும்.
3 சர்வதேச பல்கலைக்கழகங்கள்
- வணிகம் மற்றும் மேலாண்மையில் உலகளவில் 27வது இடத்தைப் பிடித்துள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் அகமதாபாத் (IIMA)
- பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழகம் (AUB), உலகளவில் 237வது இடத்தைப் பிடித்துள்ளது.
- சவுதி அரேபியாவின் ஃபகீ மருத்துவ அறிவியல் கல்லூரி
துபாயின் தனியார் கல்வித்துறை அளவு, தரம் மற்றும் பன்முகத்தன்மையில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. புதிய நர்சரி பள்ளிகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வலுவான முதலீட்டாளர் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன. நம்பகமான கல்வி நிறுவனங்கள் மற்றும் புதுமையான பாடத்திட்டங்களை வரவேற்பதன் மூலம், கற்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி, துபாயின் நீண்டகால பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை ஆதரிக்கிறோம் என அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையத்தின் (KHDA) இயக்குநர் ஜெனரல் ஆயிஷா மீரான் கூறினார்.
