அமீரகத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்தது கல்வி அமைச்சகம்.
கோடை விடுமுறைக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 15 முதல் அமீரகத்தில் உள்ள பள்ளிகளில் புதிய கல்வியாண்டு தொடங்கியது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு முயற்சிகளை கல்வி அமைச்சகம் செய்து வரும் நிலையில் பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதித்துள்ளது.
மாணவர்களின் நலன்
மாணவ, மாணவிகளின் கல்வித்திறன் மேம்படவும், பள்ளி வளாகத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் மற்றும் நேர்மறையான நடத்தையை ஊக்குவிக்கவும் பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்படுவதாக கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தத் தடை அமைச்சரவைத் தீர்மானம் எண் 851/2018-ன்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆய்வு மற்றும் நடவடிக்கை
அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, பள்ளி நிர்வாகம் மொபைல் போன்களை கண்டறிய வழக்கமான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். விதிமுறைகளுக்கு இணங்க மாணவர்களின் தனியுரிமையை மதிக்க வேண்டும். மேலும் ஆய்வாளர்கள் மாணவர்களை உடல் ரீதியாகத் தொடக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தங்கள் உடமைகளில் உள்ள பொருட்களை ஆய்வுக் குழுவின் முன் தாங்களாகவே எடுத்து காண்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு செல்போன் கொண்டு வந்தால் ஒரு மாதம் செல்போன் பறிமுதல் செய்யப்படும். மீண்டும் இதே தவறு நடைபெறும் பட்சத்தில் ஒரு கல்வி ஆண்டு முழுவதும் செல்போன் பறிமுதல் செய்யப்படும். மீறல் கண்டறியப்பட்டால் உடனடியாக பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்படுவார்கள். இந்தப் அறிவுறுத்தல்களைப் பள்ளிகள் பின்பற்றத் தவறுவது நிர்வாக விதிமீறல் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடவடிக்கைகள், குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
