டிஜிட்டல் படைப்பாளிகளுக்கான உலகின் மிகப்பெரிய மாநாடான ‘1 பில்லியன் ஃபாலோவர்ஸ் உச்சிமாநாடு’ (1 Billion Followers Summit) அடுத்தாண்டு ஜனவரி 9 முதல் 11 வரை துபாயில் நடைபெற உள்ளது. துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் ஆதரவின் கீழ் நடைபெறும் இந்த மாநாடு, படைப்பாளர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை, ஐக்கிய அரபு அமீரக அரசின் ஊடக அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு, ஜுமேரா எமிரேட்ஸ் டவர்ஸ் (Jumeirah Emirates Towers), டி.ஐ.எஃப்.சி (DIFC) மற்றும் மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர் (Museum of the Future) ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும். இதன் முக்கியக் குறிக்கோள், நல்ல உள்ளடக்கத்தை உருவாக்குவதாகும். இந்த மாநாட்டில், உலகெங்கிலும் இருந்து 3 பில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் கொண்ட பிரபல படைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
$1 மில்லியன் பரிசுடன் ஏ.ஐ. திரைப்படப் போட்டி!
இந்த மாநாட்டின் சிறப்பம்சங்களில் ஒன்று, 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை கொண்ட ஏ.ஐ. (Artificial Intelligence) திரைப்படப் போட்டி. இது, ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படங்களுக்கான உலகின் மிகப்பெரிய போட்டி. கூகுள் ஜெமினி உடன் இணைந்து நடத்தப்படும் இந்தப் போட்டி, திரைப்படத் தயாரிப்பில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தும்.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் திரைப்படம் மாநாட்டில் அறிவிக்கப்பட்டு, சிறந்த 10 திரைப்படங்கள் நேரலையில் திரையிடப்படும். கதைக்களம், படைப்பாற்றல், உண்மைத்தன்மை மற்றும் மனிதநேய செய்திகளைப் பரப்புதல் போன்ற அம்சங்களின் அடிப்படையில் நடுவர்கள் திரைப்படங்களை மதிப்பிடுவார்கள்.
படைப்பாளர்களுக்கு AED 50 மில்லியன் நிதி உதவி!
‘கிரியேட்டிவ்ஸ் வென்ச்சர்ஸ் திட்டம்’ (Creatives Ventures Program) என்ற புதிய திட்டத்தின் கீழ், உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு AED 50 மில்லியன் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ‘கான்டென்ட் கிரியேட்டர்ஸ் அக்சிலரேட்டர் திட்டம்’ (Content Creators Accelerator Program) என்ற திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இது, புதிய யோசனைகளைக் கொண்ட தனிநபர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல், நிதி உதவி மற்றும் ஆதரவை வழங்கும்.
புதிய படைப்பாளிகள் அரங்கம்!
முதல் முறையாக, 2026 மாநாட்டில் ‘கான்டென்ட் கிரியேஷன் கம்பெனிஸ் பெவிலியன்’ (Content Creation Companies Pavilion) என்ற புதிய அரங்கம் திறக்கப்படும். இதில், 100 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் பங்கேற்று, தங்கள் திட்டங்களைக் காட்சிப்படுத்துவதுடன், பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த மாநாட்டில் கூகுள், மெட்டா, இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் (X), டிக்டாக் (TikTok) மற்றும் ஸ்னாப்சாட் (Snapchat) போன்ற உலகின் முன்னணி டிஜிட்டல் தளங்களும் பங்கேற்கின்றன. இந்த மாநாடு துபாயை, உலகளாவிய படைப்பாளிகள் பொருளாதாரத்தின் மையமாக வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய சாதனை:
நான்காவது பதிப்பான இந்த உச்சி மாநாடு, ஜனவரி 2025-இல் நடந்த மூன்றாவது பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து நடைபெறுகிறது. மூன்றாவது மாநாட்டில் 15,000-க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் மற்றும் 30,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் 542 மில்லியன் பார்வைகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
