இனி வருடாவருடம் மாலத்தான்; துபாய் இளவரசர் அறிவிப்பு!

துபாயின் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், “துபாய் மாலத்தான்” நிகழ்வை 2026 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மூன்று மாதங்களுக்கு நடத்த உத்தரவிட்டுள்ளார். 

மாலத்தான்:

கோடையில் மக்களின் உடல் செயல்பாடுகளை  ஊக்குவிப்பதற்காக மால்களில் நடைபயிற்சி & ஓட்டப் பயிற்சியில் ஈடுபடும் வகையில் மாலத்தான் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி துபாயில் உள்ள 9 மால்களில் ஆகஸ்ட் 1 முதல் 31 வரை, தினசரி காலை 7:00 மணி  முதல் காலை 10:00 மணி வரை ஓட்டப் பயிற்சியில் ஈடுபடலாம். இதற்கென்று 10 கி.மீ.க்கு பிரத்யேக தடங்கள் மால்களின் உள்ளே அமைக்கப்பட்டிருந்தது. 

கின்னஸ் சாதனை:

இந்த வருடம் நடந்த முதல் மாலத்தான் நிகழ்ச்சி, பெரும் வெற்றியைக் கண்டது. இதன் இறுதி நாளில், துபாய் ஹில்ஸ் மாலில் (Dubai Hills Mall) நடந்த ஒரு ஓட்டப் பந்தயத்தில் 1,392 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு, ஒரே இடத்தில் அதிக நபர்கள் பங்கேற்ற ஓட்டப் பந்தயத்திற்கான கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தினர். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், வெவ்வேறு வயதுப் பிரிவினரும் கலந்துகொண்டனர்.

மாலத்தானில் நிகழ்ந்தவை:

ஒரு மாத காலம் நடந்த இந்த மாலத்தான் நிகழ்வில் 40,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மொத்தம் 120 மில்லியன் அடிகள் பதிவு செய்யப்பட்டன. ஐக்கிய அரபு அமீரக மகளிர் தினத்தைக் குறிக்கும் வகையில், துபாய் விளையாட்டு கவுன்சிலுடன் இணைந்து பெண்களுக்கான சிறப்பு ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டது. நிறைவு நாளில் 40 ஓட்டப் பந்தய வீரர்களைக் கொண்ட 42 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

மாலத்தான் நோக்கம்: 

இந்த மாலத்தான் நிகழ்வு, துபாய் சமூக அஜெண்டா 33 (Dubai Social Agenda 33) மற்றும் துபாய் வாழ்க்கை தர உத்தி 2033 (Dubai Quality of Life Strategy 2033) ஆகியவற்றின் நோக்கங்களுக்கு ஏற்ப, உடற்பயிற்சியை ஒரு அன்றாடப் பழக்கமாகவும், வாழ்க்கை தரத்தின் ஒரு முக்கிய அங்கமாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இந்த மாலத்தான் நிகழ்வு, துபாய் ஒரு உலகளாவிய விளையாட்டு மையமாக வளர்ந்து வருவதைக் காட்டுகிறது, மேலும் புதுமையான சமூகத் திட்டங்களின் மூலம் மக்களின் வாழ்க்கையில் நிலையான மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பதை நிரூபிக்கிறது.

வருடா வருடம் மாலத்தான்: 

இந்நிலையில், முதல் முறையாக நடைபெற்ற துபாய் மாலத்தான் நிகழ்வுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை மாலத்தான் நடைபெறும் என துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.