ஐரோப்பா, மத்திய கிழக்கு & ஆப்பிரிக்க (EMEA) பிராந்தியத்தில் உள்ள பணக்கார நகரங்களில் துபாய் 4-வது இடத்தில் உள்ளது.
வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிகப்படியான முதலீட்டாளர் வருகை ஆகியவற்றால் துபாய் பணக்கார நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. Stewards Investment Capital நிறுவனம் வெளியிட்ட ‘தி ரைஸ் ஆஃப் துபாய்‘ ஆய்வின்படி, ஜூன் 2025 வரை துபாயில் 86,000 மில்லியனர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 251 சென்டி-மில்லியனர்கள் மற்றும் 23 பில்லியனர்கள் உள்ளனர்.
பணக்கார நகரம் துபாய்:
ஐரோப்பா, மத்திய கிழக்கு & ஆப்பிரிக்க (EMEA) பிராந்தியத்தில் உள்ள பணக்கார நகரங்களில் துபாய் 4-வது இடத்தை பிடித்துள்ளது. லண்டன், பாரிஸ் மற்றும் மிலன் ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.
தற்போதைய நிலை தொடர்ந்தால் 2040ஆம் ஆண்டுக்குள் துபாய் முதல் மூன்று நகரங்களை முந்தி EMEA பிராந்தியத்தின் பணக்கார நகரமாக மாறும் என கூறப்படுகிறது.
ஜூன் 2025 நிலவரப்படி துபாயின் மொத்த திரவ முதலீடு செய்யக்கூடிய செல்வம் தோராயமாக AED 4 டிரில்லியன் ($1.1 டிரில்லியன்) இருக்கும். முதலிடத்தில் உள்ள லண்டன் 212,000 மில்லியனர்களின் வசிப்பிடமாக உள்ளது. பாரிஸ் 163,000 மில்லியனர்களுடன் இரண்டாவது இடத்திலும், மிலன் 121,000 மில்லியனர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
அதிகரித்து வரும் மக்கள் தொகை:
குறைந்த வரி, தரமான சுகாதாரம், மேம்பட்ட கல்வி அமைப்பு, சுற்றுச்சூழல்-நிலை, பாதுகாப்பு, விமான இணைப்பு, அந்நிய நேரடி முதலீடுகள் ஆகியவை பணக்காரர்களை ஈர்க்கும் முக்கிய காரணியாக துபாயில் இருப்பதாக ‘தி ரைஸ் ஆஃப் துபாய்’ ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஆண்டுதோறும் துபாயின் மக்கள் தொகை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
