தங்க நகைகள் மற்றும் தங்கக்கட்டிகளுக்கு புகழ்பெற்ற அமீரகத்தில் இருந்து இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தங்கம் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவ்வாறு தங்கம் அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு எடுத்து செல்லும் போது, அங்கு சுங்க வரிகள் விதிக்கப்படுகின்றது.
இந்தியாவுக்கு தங்கம் கொண்டு செல்வதற்கான சுங்க வரிகள்!
தங்கத்தின் எடை, வடிவம் மற்றும் எவ்வளவு நாள் அமீரகத்தில் தங்கியிருந்தீர்கள் என்பதை பொருத்து இந்த சுங்க வரிகள் விதிக்கப்படுகின்றது.
தற்போது உள்ள விதிகளின் படி,
வெளிநாட்டில் 1 வருடத்திற்கும் மேலாக தங்கியிருந்தால்,
ஆண்கள் ₹50,000 (AED 2,100) மதிப்புள்ள 20 கிராம் வரை தங்கத்தையும், பெண்கள் ₹100,000 (AED 4,200) மதிப்புள்ள 40 கிராம் தங்கத்தையும் வரியில்லாமல் எடுத்து செல்லலாம்.
6 மாதங்களுக்கும் குறைவாக தங்கியிருந்தால்,
சுமார் 38.5% வரை வரி விதிக்கப்படும். தங்கத்தின் எடையை பொறுத்து வரியின் அளவு உயர்த்தப்படும்.
6 – 12 மாதங்கள் வெளிநாட்டில் தங்கி இருந்தால்,
அதிகபட்சம் 1 கிலோ வரை தங்கத்தை வரியின்றி எடுத்து செல்லலாம். அதற்கு மேல் இருந்தால் சுங்கவரி 13.75% (அடிப்படை வரி + சேர்க்கை கட்டணங்கள்) விதிக்கப்படும்.
இந்த வரிகளுக்கான சுங்கச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் 1962ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதற்கு முன் இருந்த கடல் சுங்கச் சட்டம், 1878, நில சுங்கச் சட்டம், 1924 போன்ற பல்வேறு சட்டங்களை ஒருங்கிணைத்து, சுதந்திர இந்தியாவின் புதிய தேவைகளுக்கு ஏற்ப இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
சுங்க வரி விதிகளில் உள்ள தங்கத்தின் விலை மற்றும் கிராம்,
தற்போதைய தங்கத்தின் விலை மற்றும் கிராம் ஆகியவை மாறுபாடாக இருப்பதால், தங்கம் கொண்டு செல்லும் விதிமுறைகள் குறித்து விளக்கமளிக்க கோரி, ஷார்ஜா இந்திய சங்கம் (Indian Association of Sharjah), இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் தற்போதைய தங்கத்தின் விலைகளுக்கு ஏற்ப, விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தங்க விலை ஏற்றத்தால் பயணிகளுக்கு ஏற்படும் சிக்கல்கள்!
இது குறித்து சங்கத்தின் தலைவர் நிஜார் தலங்கரா, “இந்தியர்கள் தங்கள் நாட்டிற்குச் செல்லும்போது விமான நிலையங்களில் இது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது,” என்று கூறினார்.
சங்கத்தின் துணைத் தலைவர் பிரதீப் நெம்மாரா, ”நான் இந்தியா சென்றபோது, 30 கிராம் எடையுள்ள இரண்டு தங்க வளையல்களை வைத்திருந்ததற்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன். தங்கத்தை எடுத்துச் செல்கிறேனா என்று அதிகாரிகள் கேட்டபோது, நான் வைத்திருந்ததை சொன்னேன். அதிகாரிகள் ‘ஏதாவது கொடுங்கள்’ அல்லது 35% வரி செலுத்துங்கள் என்று கூறினர். நான் சட்டப்படி மட்டுமே நடப்பேன் என்று கூறியதால், நான் கொண்டு வந்த தங்கத்திற்கு ரூ.107,000 (தோராயமாக AED 4,400) வரி செலுத்த வேண்டியிருந்தது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் எவ்வளவு தங்கம் கொண்டு செல்லலாம் என்ற சட்டம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.
தற்போதைய சூழலில் தங்கத்தின் விலை மிக அதிகமாக உள்ள நிலையில், சிறிய அளவு தங்க நகைகளைக் கூட கொண்டு வரும் பயணிகளும் அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது. அதிகாரிகள், நான் அடிக்கடி இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பயணம் செய்வதால், நான் தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர். அவர்கள் என்னை ஒரு திருடனைப் போல் நடத்தினார்கள்” என்றார்.
2016ஆம் ஆண்டு தங்கத்தை கொண்டு செல்லும் விதிமுறை வெளியிடப்பட்டபோது, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ₹2,500 (AED 104) ஆக இருந்தது. ஆனால் இப்போது தங்கத்தின் விலை மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, 40 கிராம் தங்கத்தின் மதிப்பு AED 16,000-க்கு அதிகமாகவும், 20 கிராம் 22 காரட் தங்கத்தின் மதிப்பு AED 8,000-க்கு அதிகமாகவும் உள்ளது.
இந்த விலை முரண்பாடு, பயணிகளுக்கும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த முரண்பாடு, சுங்கச் சோதனைகளில் தேவையற்ற விவாதங்களுக்கும், பயணிகளுக்கு சிரமத்திற்கும், சில சமயங்களில் ஊழலுக்கும் வழிவகுக்கிறது.
பழைய விலை வரம்பை நீக்க கோரிக்கை:
இது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, அதிகாரிகளின் பணியையும் கடினமாக்குகிறது,” என்று நிஜார் தலங்கரா கூறினார்.
எனவே, இந்த பழைய விலை வரம்பை நீக்கிவிட்டு, பயணிகள் ஒரு குறிப்பிட்ட எடை வரையிலான தங்க நகைகளை மட்டும் வரியின்றி கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என ஷார்ஜா இந்திய சங்கம் கோரியுள்ளது.
