அடர்ந்த பனிமூட்டத்திற்கான எச்சரிக்கை; அமீரகத்தின் இன்றைய வானிலை அறிக்கை!

இன்று காலை சில பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் தொடரும் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) எச்சரித்துள்ளது.

பனிமூட்டம் எச்சரிக்கை: 

பனிமூட்டம் இருக்கும்போது அபுதாபி சாலைகளில் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 80 கிமீ ஆகக் குறைக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் தங்கள் பாதுகாப்பு மற்றும் மற்றவர்களின் பாதுகாப்புக்காக இந்த வேக வரம்பை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அபுதாபி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இன்று செப்.30 காலை, அல் தாஃப்ரா பிராந்தியத்தில் உள்ள மதினாத் ஸாயத், அல் கிதாயிரா, உம் அல் அஷ்டான், அல் குவைஃபாத், காஸ்யூரா மற்றும் அல் அய்னில் உள்ள உம் அஸிமுல் மேற்குப் பகுதிகள், அல் கூ போன்ற பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது.

துபாயின் மேற்குப் பகுதிகளான ஜெபல் அலி மற்றும் துபாய் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பார்க் (DIP) பகுதிகளிலும் பனிமூட்டம் நீடித்தது.

நாடு முழுவதும் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது லேசானது முதல் மிதமான காற்று வீசும், இது தூசி மற்றும் மணலைத் தூக்கிச் செல்லும். எனவே தூசி ஒவ்வாமை உள்ளவர்கள் வெளியே செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.

வெப்பநிலை மற்றும் ஈரப்பதம்:

நாடு முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை 38∘ முதல் 42∘ C வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 20∘ முதல் 26∘ C வரை இருக்கும். கடலோரப் பகுதிகளில் சராசரி வெப்பநிலை 36 முதல் 39∘ C வரையிலும், ஈரப்பதம் 70 முதல் 90 சதவீதம் வரையிலும் இருக்கும்.

மலைப்பகுதிகளில்  வெப்பநிலை 21∘ முதல் 26∘C வரையிலும், ஈரப்பதம் 45 முதல் 65 சதவீதம் வரையிலும் இருக்கும். இன்று இரவு மற்றும் புதன்கிழமை காலை, குறிப்பாக கடலோர மற்றும் உள் பகுதிகளில் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடலோர மக்களுக்கு எச்சரிக்கை

அரேபிய வளைகுடாவில் கடல் கொந்தளிப்பாகவும், ஓமன் கடலில் லேசானது முதல் மிதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்.25 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் வெப்பநிலை குறையும் என்றும் தேசிய வானிலை மையம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGGED: