8 ஆண்டுகளாக முதலிடத்தில் துபாய்; உயர் தரத்திலான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்த்து புதிய சாதனை!

Financial Times–FDI Markets வழங்கிய தரவின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், துபாய் 640-க்கும் மேற்பட்ட புதிய உயர் தரத்திலான வெளிநாட்டு நேரடி முதலீட்டு (FDI) திட்டங்களை ஈர்த்து,  உலக நகரங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த சாதனையை துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் அறிவித்துள்ளார்.

உலக நாடுகளில் முதலிடம் 

“தொடர்ந்து எட்டாவது முறையாக துபாய், புதிய FDI திட்டங்களை அதிகளவில் ஈர்த்து உலக நாடுகளில் முதலிடம் பெற்றுள்ளது. 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 640-க்கும் மேற்பட்ட உயர் தரத்திலான திட்டங்கள் துபாயை நோக்கி வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு மைல்கல்

இதுமட்டுமின்றி, துபாயின் தொலைநோக்குத் தலைமையும், முதலீட்டாளர்களுக்கு ஏற்ற விரிவான, நவீன சூழலும், உலகளாவிய அளவில் ஒரு புதிய தரத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும், இது ஒரு மைல்கல்லாக இருக்கும் எனவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்களின் நம்பிக்கை

“எமது முதலீட்டுச் சூழலின் வலிமை, ஒழுங்குமுறைகளின் வெளிப்படைத்தன்மை, அடிப்படை வசதிகளின் செயல்திறன் மற்றும் உலக பொருளாதார மாற்றங்களுக்குத் தகுந்த வகையில் ஏற்றுக்கொள்ளும் திறன் ஆகியவை எங்களுடைய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது” என மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

இது துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் முன்னோக்கிய பார்வை, அறிவு நிறைந்த  வழிகாட்டல்கள், அரசுத் துறை குழுக்களின் அர்ப்பணிப்பு மற்றும் தனியார் துறையுடனான வலுவான கூட்டாண்மை ஆகியவற்றால் சாத்தியமாகிய ஒரு உலகளாவிய வெற்றிக்கதை என்றே சொல்லலாம்.

எதிர்காலம் துபாய், துபாயே எதிர்காலம்

இலக்குகளை நோக்கி தொடரும் வளர்ச்சியைக் கூறிய துபாய் இளவரசர், “ஒவ்வொரு நாளும் துபாய் பொருளாதாரத் திட்டமான D33 இன் இலக்குகளை நாம் நெருங்கிக் கொண்டிருப்பதாகவும்,  எதிர்காலம் துபாய், துபாயே எதிர்காலம், எனத் தாம் உறுதிப்பட கூற முடியும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.