கரீம் ஃபுட் ஷார்ஜாவில் அறிமுகம் முதல் மழைக்கு வாய்ப்பு; அமீரகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்!

பயண நேரத்தை குறைக்கும் பாலம் திறப்பு!

துபாயின் ஷேக் சயீத் சாலையில் இருந்து மால் ஆப் எமிரேட்ஸுக்கு நேரடியாக செல்லும் வகையில் கட்டப்பட்ட புதிய பாலம் அக்.5ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது.  இதனால் அப்பகுதியில் மாலுக்கு செல்லும் பயண நேரம் 10 நிமிடத்தில் இருந்து 1 நிமிடமாக குறையும் என துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

துபாயின் போக்குவரத்து ஆணையம் இதை மாலின் உரிமையாளர்களுடன் (Majid Al Futtaim) இணைந்து கட்டி உள்ளது. இந்த பாலம், AED  165 மில்லியன்   மதிப்பிலான, அல் பர்ஷா சுற்றுப்புறத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஜனவரி மாதம் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியது. 300 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் அபுதாபி மற்றும் ஜெபல் அலியிலிருந்து மால் ஆப் எமிரேட்ஸுக்கு வருபவர்களின் பயண நேரத்தை குறைக்கும். உம்மு சுகீமிலிருந்து வருபவர்களின் பயணம் 15 நிமிடங்களிலிருந்து 8 நிமிடங்களாக குறையும்.     

அபுதாபி கோயிலில் தீபாவளி சிறப்பு பூஜை!

தீபாவளியை முன்னிட்டு அக்.20 அன்று அபுதாபி BAPS கோயிலில் மாலை 7:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தீபாவளி சிறப்பு பூஜை அக்.20 அன்று மாலை 7:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும், வழக்கமான வழிபாடு காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

முன்பதிவு & முழு விவரம்: https://www.mandir.ae/events/diwali   

இந்தியர்களுக்காக சிறப்பு சலுகையை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

அமீரகம், சவூதி, குவைத் உள்ளிட்ட 6 வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு நவ.30 வரையிலான பயணங்களுக்கு முன்பதிவு செய்யும் பயணிகள் AED 1-க்கு கூடுதலாக 10 கிலோ உடமைகளை எடுத்துச் செல்லலாம் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. 

அமீரகம், சவூதி, குவைத், ஓமன், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய வளைகுடா நாடுகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தும். நவ.30 வரையிலான பயணங்களுக்கு இச்சலுகையைப் பெற அக். 31ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இந்தச் சலுகையை நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஒருமுறை டிக்கெட் வழங்கப்பட்ட பிறகு, இந்த AED 1 சலுகையை சேர்க்க முடியாது என்று விமான நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. பண்டிகைக் கால உற்சாகத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்ட இந்தச் சலுகை, வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கரீம் ஃபுட் ஷார்ஜாவில் அறிமுகம்!

துபாயில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் முன்னணி தளமான Careem Food தற்போது ஷார்ஜாவில் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் ஏற்கனவே கரீம் ரைட்ஸ் மற்றும் கரீம் பே உள்ள நிலையில், தற்போது கரீம் ஃபுட், கரீம் பாக்ஸ் மற்றும் வீட்டு சேவைகள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அமீரகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

அமீரகத்தின் தெற்கு பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அக்.10 முதல் 14ஆம் தேதி வரை மிதமான முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழையால் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை குறைந்து இதமான சூழல் நிலவும். காற்றின் வேகம் தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் மிதமாக வீசக்கூடும் எனவும்  தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தகவல் அளித்துள்ளது. 

TAGGED: