ஆன்லைனில் மோசடி வலையில் சிக்கிய நபரின் காரை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது துபாய் காவல்துறை.
ஆன்லைன் கார் மோடி
துபாயில் வசிக்கும் அஹ்மத் அல் மர்சோகி என்பவர் தனது 2021 மாடல் வோக்ஸ்வாகன் கோல்ஃப் ஜிடிஐ காரை ஒரு பிரபலமான ஆன்லைன் தளத்தில் AED 90,000-க்கு விற்பனைக்கு பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்குள் ஒரு பெண் அவரை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு, தன்னை ஒரு எமிராட்டி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தனது மகனுக்கு பரிசளிக்க கார் வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவரது நம்பிக்கையை பெற தனது எமிரேட்ஸ் ஐடியின் நகலையும் பகிர்ந்து கொண்டுள்ளார். காரில் ஏதேனும் விபத்து பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க அந்த பெண் காரின் பதிவு எண்ணை கேட்டுள்ளார். மேலும், காரை டோ டிரக் (Tow Truck) உதவியுடன் தன்னிடம் அனுப்பி வைக்க அவரை வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஏற்கனவே பணத்தை பரிமாற்றம் செய்துவிட்டதாகவும் அல் மர்சோகிக்கு ஒரு ரசீதையும் அனுப்பியுள்ளார்.
இதை நம்பிய அல் மர்சோகி, ஷார்ஜாவில் அந்த பெண் இருக்கும் இடத்திற்கு டோ டிரக் மூலம் காரை அனுப்பியுள்ளார். அத்துடன் காருடன் தொடர்புடைய சான்றிதழ்களையும் கொடுத்துள்ளார். ஆனால் சோதித்து பார்த்தபோது பணம் வரவில்லை என்பதால் அல் மர்சோகி, அந்த பெண்ணை தொடர்ந்து தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தும் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த அவர் துபாய் காவல்துறையில் புகார் அளித்தார்.
காவல்துறையின் துரித நடவடிக்கை
அல் மர்சோகி அளித்த புகாரை தொடர்ந்து வாட்ஸ்ஆப் கலந்துரையாடல், டோ டிரக்கின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து விசாரணையை தொடங்கிய துபாய் காவல்துறை, 24 மணி நேரத்தில் கார் இருக்கும் இடத்தை எட்டியது.
இருப்பினும் மோசடியில் தொடர்புடைய அனைவரையும் கண்டுபிடிக்க இன்டர்போல் உடன் இணைந்து மூன்று வாரங்களாக காரை பின் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்ட துபாய் காவல்துறை, அந்த காரை ரஷீத் துறைமுகம் வழியாக வெளிநாட்டிற்கு கடத்த முயற்சித்தது தெரியவரும்போது கார் மீட்கப்பட்டது. மேலும் இந்த மோசடிக்குப் பின்னால் இருந்த அரபு நாட்டவர் மற்றும் இரண்டு ஆசிய நாட்டவர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
