துபாயில் உள்ள ஜபீல் பூங்காவில் நடைபெற்ற ‘Ghar Jaisi Diwali’ என்ற பிரமாண்ட தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் எதிர்பார்த்ததை விட அதிகமானோர் கலந்து கொண்டனர்.
அமீரகத்தில் எமிராட்டிகளை விட வெளிநாட்டினர் அதிகமானோர் வசிக்கின்றனர். இதனால் உலகின் எந்த நாட்டின் கலாச்சார கொண்டாட்டமாக இருந்தாலும் அந்த நிகழ்வு அமீரகத்தில் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் அமீரகத்தில் 4.3 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் வசிப்பதால் இங்கு இந்திய கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற ‘Ghar Jaisi Diwali’ என்ற கொண்டாட்ட நிகழ்வு இந்த ஆண்டும் துபாயில் நடைபெற்றது.
இந்திய கலாச்சார கொண்டாட்ட நிகழ்வு:
அக்டோபர் 16, ஞாயிற்றுக்கிழமை துபாயில் உள்ள ஜபீல் பூங்காவில் மாலை முதல் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியது. அலைகடலென வந்த இந்தியர்கள் ஆடல், பாடல் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதுமட்டுமின்றி பல்வேறு மாநிலங்களின் உணவு வகைகளை விற்பனை செய்யும் உணவுக் கடைகள் இங்கு அமைக்கப்பட்டிருந்தன. அசம்பாவிதம் ஏற்படாமல் வந்திருந்த அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நுழைவாயில், வெளியேறும் பகுதி என அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்வு எமிராட்டி மற்றும் இந்திய மக்களுக்கு இடையிலான நட்பு மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தின் வலுவான பிணைப்புகளை பிரதிபலிக்கும் ஒரு பண்டிகையாக அமைந்தது.
இந்த நிகழ்வில் அமீரக வெளியுறவு இணை அமைச்சர் நூரா அல் காபி மற்றும் அமீரகத்திற்கான இந்திய துணை தூதர் அமர்நாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அமீரகத்தின் மிகப்பெரிய கொண்டாட்ட நிகழ்வு:
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 60,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாக தெரிவித்த நிலையில், 100,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அமீரகத்தில் நடைபெற்ற இதுபோன்ற கொண்டாட்டங்களிலேயே இது மிகப்பெரியது என அரசு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
