அமீரகத்தின் கொடி நாள் ஒவ்வோர் ஆண்டும் நவ.3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அமீரகம் தனது 13வது கொடி தினத்தை நவம்பர் 3, 2025 திங்கட்கிழமை கொண்டாடுகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் தேசிய கொடி தினம்:
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காரணங்களுக்காக கொடி தினம் அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது. உதாரணமாக 1947ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சபையால் இந்திய தேசியக் கொடி (Tiranga) ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறிக்கும் வகையில் இந்தியாவில் ஜூலை 22ஆம் தேதி தேசியக் கொடி தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஜூன் 14, 1777 அன்று அமெரிக்கக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் அமெரிக்காவில் ஜூன் 14ஆம் தேதி கொடி தினம் கொண்டாடப்படுகிறது. 1901ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று ஆஸ்திரேலிய தேசியக் கொடி முதன்முதலாக மெல்போர்னில் ஏற்றப்பட்டது. அந்த நாளை நினைவுகூரும் விதமாக ஆஸ்திரேலியாவில் கொடி தினம் கொண்டாடப்படுகிறது. அதேபோல் அமீரகத்திலும் குறிப்பிட்ட காரணங்களுக்காக கொடி தினம் கொண்டாடப்படுகிறது.
அமீரக கொடி தினம்
ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 3 அன்று அமீரகம் கொடி தினத்தைக் கொண்டாடுகிறது. இந்த தினத்தன்று பொது விடுமுறை இல்லாவிட்டாலும், நாடு முழுவதும் உள்ள எமிராட்டிகளும், குடியிருப்பாளர்களும் ஒன்றுபட்டு, அலுவலகங்கள், பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் தேசிய பெருமையைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் கொடியை ஏற்றுகிறார்கள்.
சுய ஆட்சி பகுதிகளாக செயல்பட்டு வந்த துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட 6 எமிரேட்டுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு 1971ஆம் ஆண்டு டிசம்பர் 2 அன்று ஒருங்கிணைத்த ஐக்கிய அரபு நாடு அறிவிக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்த அமீரகத்தின் முதல் அதிபர் மாண்புமிகு ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் முதல் முறையாக அமீரக கொடியை ஏற்றினார்.
அமீரகத்தின் முதல் அதிபர் மறைவுக்கு பிறகு 2004ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி முன்னாள் அதிபர் மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் பதவியேற்றுக்கொண்டார். அந்த சிறப்பான நாளை குறிக்கும் வகையில் துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் யோசனையால் 2013ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அமீரகத்தில் கொடி நாள் கொண்டாடப்படுகிறது.
அமீரக கொடியின் 4 நிறங்களின் அர்த்தங்கள்
சிவப்பு:
சிவப்பு என்பது கடினத்தன்மை, துணிச்சல், வலிமை மற்றும் தைரியத்தை குறிக்கிறது. அதன் செங்குத்து வடிவம் மற்ற அனைத்து அர்த்தங்களையும் ஒற்றுமையுடன் இணைப்பதாகும்.
பச்சை:
நம்பிக்கை, மகிழ்ச்சி, மற்றும் அன்பைக் குறிக்கிறது. இது நாட்டின் செழிப்பையும் குறிக்கும்.
வெள்ளை:
அமைதி நேர்மை மற்றும் தூய்மையை குறிக்கிறது.
கருப்பு:
எமிராட்டிகளின் மன வலிமையையும், எதிரிகளை தோற்கடிப்பதற்காக திறனையும் குறிக்கிறது.
