வைரலான துபாய் சாக்லேட்டை உருவாக்கிய சமையல் கலைஞர் நௌயல் கேட்டிஸ், தற்போது புதிதாக இனிப்பு மற்றும் காரம் கலந்த சுவையில் அபுதாபி சாக்லேட்டை உருவாக்கியுள்ளார்.
அபுதாபி சாக்லேட்:
அபுதாபியின் தனித்துவமான சுவைகளையும் அடையாளத்தையும் பிரதிபலிக்கும் வகையில், உப்பு சேர்க்கப்பட்ட கேரமல் (Salted Caramel) மற்றும் ஹல்வா கலவையில் சாக்லேட்டை பிரபல சமையல் கலைஞர் நௌல் காடிஸ் அறிமுகப்படுத்தியுள்ளார்.
துபாயில் பிரபலமடைந்த சாக்லேட்டை உருவாக்க உதவியவர் இவர்தான். இந்த புதிய அபுதாபி சாக்லேட் பற்றி காடிஸ் கூறுகையில், “நீங்கள் இதைச் சுவைக்கும்போது, அபுதாபியின் உணர்வை உடனே பெறுவீர்கள். இதைச் சாப்பிட்ட வயதான எமிராட்டியர்களுக்கு தங்கள் வீட்டை நினைவூட்டும்.
சாக்லேட் சுவை இளைய தலைமுறையினருக்குப் பிடித்திருந்தாலும், இதில் சேர்க்கப்பட்டுள்ள பாரம்பரியப் பொருட்கள் மூத்த தலைமுறையினரையும் கவரும் வகையில் உள்ளது. இது ஒரு சாதாரண ஸ்னிக்கர்ஸ் (Snickers) அல்லது ட்விக்ஸ் (Twix) போன்ற வணிக சாக்லேட் அல்ல, இது கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட சாக்லேட்” என்றார்.
என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளது?
ஒரு வருட முயற்சிக்குப் பிறகு இந்தச் சாக்லேட் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஏலக்காய், குங்குமப்பூ போன்ற பலவிதமான மசாலாப் பொருட்கள், எள்ளு விழுது (Tahini), மற்றும் பேரீச்சம்பழ சிரப் சேர்க்கப்பட்டுள்ளன.
காலை உணவில் சாப்பிடும் இனிப்பு-காரமான பலாலீத் (Balaleet) உணவின் குறிப்புகளும் இதில் உள்ளன. இந்தச் சிறப்பு கலவை ஒரு கெட்டியான உப்பு கேரமல் அடுக்கில் சேர்க்கப்பட்டு, மேலே 24 காரட் தங்கத் துகள்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
விலை:
200 கிராம் கொண்ட இந்த சாக்லேட் பார் AED 100 விலையில் விற்கப்படுகிறது. இது உள்நாட்டு உணவகமான ரெயின் கஃபேவில் (Rain Cafe) மட்டுமே கிடைக்கும்.
அபுதாபிக்கு சமர்ப்பணம்
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நௌயல் கேட்டிஸ் எதிஹாட் ஏர்வேஸில் சமையல்காரராக பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 2018ஆம் ஆண்டு முதல் துபாயில் சமையல் ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தான் ஒரு வருடத்திற்கு முன் நிறுவிய ஸ்னா’ஆப் Sna’ap என்ற பிராண்ட் மூலம் தொடர்ச்சியாக நகரத்தை அடிப்படையாக கொண்ட உணவுகளை வெளியிட்டு வருகிறார். அபுதாபியில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்ததால், இந்த சாக்லேட் தனக்கு மிகவும் சிறப்பானது மற்றும் அபுதாபிக்கு தான் அளிக்கும் ஒரு சமர்ப்பணம் என்றும் அவர் கூறுகிறார்.
