ஐக்கிய அரபு அமீரகம் உலகிலேயே வேலை தேடுபவர்களின் விருப்பமான நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் வேலை தேடி அமீரகத்திற்கு வருகின்றனர். நீங்கள் புதிதாகப் பட்டம் பெற்றவராக இருந்தாலும் சரி, அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும் சரி, சரியான இணையதளத்தை அணுக வேண்டும்.
அமீரகத்தில் வேலை தேடுபவர்களுக்கு சில இணையதளங்கள் பிரதானமாக உள்ளன. இதன் மூலம் நேரில் அலுவலகங்களுக்குச் செல்லாமல், போலி விளம்பரங்கள் மற்றும் போலி ஏஜென்சிகளை நம்பாமல் ஒரே கிளிக்கில் நூற்றுக்கணக்கான வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலை வாய்ப்புகளை வழங்கும் இணையதளங்கள்
அமீரகத்தில் வேலை வாய்ப்புகளை வழங்கும் நம்பகமான சில இணையதளங்களை காணலாம்.
1. Bayt
Bayt என்பது மத்திய கிழக்கில், குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மிகப் பெரிய வேலைவாய்ப்பு இணையதளங்களில் (job portals) ஒன்றாகும். இதில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளின் ஆயிரக்கணக்கான வேலை அறிவிப்புகள் குறித்த வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்கள் உள்ளன. இதனை அறிந்து விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரங்களை பதிவேற்றலாம். திறன் தேர்வுகள், தொழில் ஆலோசனை மற்றும் வழிகாட்டலைப் பெறலாம்.
2. Naukrigulf
Naukrigulf என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் பிரபலமான மற்றும் முக்கியமான வேலைவாய்ப்பு இணையதளங்களில் ஒன்றாகும்.
இந்த இணையதளம் புதிதாக வேலை தேடுபவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்கள் என இரு தரப்பினருக்கும் பயனுள்ளதாக உள்ளது.
இது இந்தியாவின் மிகப்பெரிய வேலை தேடும் இணையதளமான Naukri.com-ன் ஒரு அங்கமாகும். எனவே, இந்தியாவில் இருந்து அமீரகத்திற்குச் சென்று வேலை தேடும் இந்தியர்களுக்கு இது மிகவும் வசதியானது மற்றும் நம்பிக்கைக்குரியது.
3. GulfTalent
GulfTalent என்பது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடுத்தர மற்றும் அதிக அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கான வேலை வாய்ப்புகளை வழங்கும் ஒரு முதன்மை வேலைவாய்ப்புத் தளமாகும். மற்ற தளங்களை விட இங்கு அதிக சம்பளம் கொண்ட, உயர் பதவி வேலை வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படும்.
இன்ஜினியரிங், நிதி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உள்ள திறமையான நிபுணர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பிராந்தியத்தின் பெரிய நிறுவனங்கள் திறமையான ஊழியர்களை பணியமர்த்த இந்தத் தளத்தைப் பயன்படுத்துகின்றன.
இங்குள்ள Recruiters பெரும்பாலும் வேலை விளம்பரங்களை வெளியிடுவதற்குப் பதிலாக, விண்ணப்பதாரர்களின் சுயவிவரங்களை நேரடியாகத் தேடி தொடர்பு கொள்வார்கள். எனவே, உங்கள் சுயவிவரம் வலுவாகவும், விரிவாகவும் இருப்பது அவசியம்.
4. Dubizzle Jobs
Dubizzle என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் பிரபலமான ஒரு வகைப்படுத்தப்பட்ட விளம்பரத் தளம் ஆகும். இங்கு வேலை வாய்ப்புக்கான பகுதி மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறது.
Dubizzle தளத்தில், மற்ற பெரிய வேலை தளத்தில் இல்லாத சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் வேலை காலியிடங்களை அதிக அளவில் வெளியிடுகின்றன. நுழைவு நிலை வேலைகள் மற்றும் அதிக அனுபவம் தேவைப்படாத வேலைகள் இங்கு அதிகம் கிடைக்கின்றன.
எனவே, புதிய பட்டதாரிகள் தங்களுக்கு முதல் வேலையைக் கண்டறிய இது உதவும். இங்குள்ள நிறுவனங்கள் சில சமயங்களில் அவசரமாக ஆட்களைத் தேடலாம். இதனால், விரைவாக வேலை தேடுபவர்கள் அல்லது உடனடியாகப் பணியில் சேர விரும்புபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
நிர்வாக உதவியாளர் (Admin Assistant), சில்லறை விற்பனை (Retail), ஓட்டுநர்கள் (Drivers), வீட்டு வேலைகள் (Domestic roles), வரவேற்பாளர் (Receptionist) போன்ற பலவிதமான வேலை வாய்ப்புகளை இங்கு பெறலாம்.
GulfTalent போன்ற தளங்கள் மூத்த நிபுணர்களை (Senior Professionals) இலக்காகக் கொள்ளும் போது, Dubizzle Jobs என்பது அன்றாட வேலைகள் மற்றும் உள்ளூர் சந்தையில் (Local Market) உள்ள சிறு தொழில்களுக்கான வாய்ப்புகளை அதிகம் வழங்குகிறது.
5. Indeed UAE
Indeed நேரடியாக வேலைகளைப் பதிவிடுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு நிறுவனங்களின் வலைத்தளங்கள், பிற ஆட்சேர்ப்பு முகவர் நிலையங்கள், மற்றும் பிற வேலைவாய்ப்பு தளங்கள் ஆகியவற்றிலிருந்து வேலை அறிவிப்புகளைச் சேகரித்து ஒரே இடத்தில் காட்டுகிறது. இதன் மூலம் நீங்கள் பல தளங்களில் தேட வேண்டியதில்லை.
இதன் எளிமையான மற்றும் நேரடியான வடிவமைப்பு காரணமாக, வேலைகளைத் தேடுவது மற்றும் விண்ணப்பிப்பது மிகவும் எளிது.
இதில் நீங்கள் குறிப்பிட்ட, துறை அல்லது இடம் சார்ந்த புதிய வேலைகள் வரும்போது, அவற்றை உடனடியாக மின்னஞ்சல் மூலம் அறிவிக்கும் வசதி உள்ளது.
6. LinkedIn Jobs
பல அமீரக நிறுவனங்கள் தங்கள் வேலைகளை LinkedIn-இல் மட்டுமே வெளியிடுகின்றன. மேலும், ஆள் சேர்ப்பவர்கள் (Recruiters) மற்றும் மனிதவள மேலாளர்கள் (HR Managers), விண்ணப்பதாரர்களின் சுயவிவரங்களை நேரடியாகத் தேடி, காலியிடங்கள் வருவதற்கு முன்பே அவர்களைத் தொடர்பு கொள்கின்றனர்.
இதில் உங்கள் வேலை அனுபவங்கள், திறமைகள், கல்வி மற்றும் பரிந்துரைகள் ஆகியவற்றைச் சரியாகப் புதுப்பிப்பது, வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளைப் பல மடங்கு அதிகரிக்கும்.
வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் தொடர்புகள் மூலமாகவே (Connections) வருகின்றன. உங்கள் துறை சார்ந்தவர்களை, நிறுவனத்தின் ஊழியர்களை, மற்றும் ஆள் சேர்ப்பவர்களை நீங்கள் இணைத்துக் கொள்வதன் மூலம், வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை எளிதில் பெறலாம்.
நீங்கள் ஒரு நிறுவனத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினால், அதன் LinkedIn பக்கத்தைப் பார்க்கலாம். அங்குள்ள கலாச்சாரம், அண்மைச் செய்திகள் மற்றும் அங்குள்ள ஊழியர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
உங்கள் சுயவிவரத்தில் நீங்கள் வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கும் ‘Open to Work’ பேட்ஜை அமைத்துக் கொள்ளலாம். இது ஆள் சேர்ப்பவர்களுக்கு நீங்கள் வேலைக்குத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிக்கும்.
7. Buzzon
“Buzzon” தளத்தில் உள்ள வேலைவாய்ப்புப் பிரிவானது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடங்களை வழங்குகிறது. இதில் நிர்வாகம் மற்றும் நிதி (Administration & Finance), விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் (Sales & Marketing), தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் (IT/Tech), பொறியியல் மற்றும் கட்டுமானம் (Engineering & Construction), உணவகங்கள் வரவேற்பாளர் (Hospitality), எலெக்ட்ரீஷியன், ஸ்டோர் கீப்பர், ஓட்டுநர், பாதுகாப்புப் பணியாளர், மருத்துவம், அழகு மற்றும் ஃபிட்னஸ் (Health & Beauty), கல்வி மற்றும் பயிற்சி (Education & Training) உள்ளிட்ட பிரிவுகளில் வேலை வாய்ப்பு விவரங்கள் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தங்கள் சுயவிவரத்தைப் பதிவிடும் வசதியும் உள்ளது.
8. Laimoon
Laimoon தளத்தில் முழுநேர (Full-time), பகுதி நேர (Part-time), ஃப்ரீலான்ஸ் (Freelance), பயிற்சி (Internship) போன்ற பல்வேறு வேலை வகைகள் உள்ளன. இது முக்கியமாக ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகள், மற்றும் இந்தியா போன்ற பிராந்தியங்களில் உள்ள வேலை வாய்ப்புகளை பட்டியலிடுவதில் கவனம் செலுத்துகிறது.
இது நிர்வாகம் (Administration), மார்க்கெட்டிங், அனலிட்டிக்ஸ் (analytics), செயல்பாடு (operations), மற்றும் ஜூனியர் தொழில்நுட்பப் பதவிகள் (junior technology roles) உள்ளிட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
மேலும் வேலை தேடுபவர்களின் சுயவிவரத்தை ஆய்வு செய்யும் சேவையை வழங்குகிறது.
சில வேலைகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்யத் திறன் சோதனைகள் வசதியையும் கொண்டுள்ளது. இதில் நிறுவனங்கள் தங்கள் வேலை வாய்ப்புகளை Laimoon-இல் இடுகையிடும் வசதி உள்ளது.
இதன் மூலம் வேலை தேடுபவர்கள் நேரடியாக நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Laimoon-இன் தனித்துவமான அம்சம் என்னவென்றால், ஒரு வேலைக்குத் தேவையான தகுதிகளை (skills) பூர்த்தி செய்ய, அது தொடர்பான பயிற்சிப் படிப்புகளையும் (courses) வேலைப் பட்டியலுடன் சேர்த்துப் பரிந்துரைக்கும்.
9. Gulf Careers
Gulf Careers கட்டுமானம், இன்ஜினீயரிங், விருந்தோம்பல் (hospitality), விற்பனை மற்றும் மார்க்கெட்டிங், தகவல் தொழில்நுட்பம் (IT & Software) உட்படப் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
இது வளைகுடா நாடுகளில் வேலை தேடும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட வேலை தேடல் தளம் (Job Portal).
வேலை தேடுபவர்களுக்கு: அனைத்து வகையான பணிகளுக்கும் (தொழிலாளர் முதல் நிர்வாகப் பதவிகள் வரை) வேலைகளைத் தேடலாம், இலவசமாக சுயவிவரத்தை உருவாக்கலாம், மேலும் வெளிநாடுகளில் நடக்கும் நேரடி நேர்காணல்கள் பற்றிய தகவல்களையும் பெறலாம்.
10. Hays
Hays என்பது ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் சிறந்த சம்பளத்தில், தொழில்முறைப் பதவிகளைத் தேட உதவும் ஒரு முன்னணி ஆட்சேர்ப்புத் தளமாகும்.
நிதி (Finance), தொழில்நுட்பம் (Technology), கட்டுமானம் (Construction), சட்டம் (Legal) போன்ற நிபுணத்துவம் வாய்ந்த துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளை கண்டுபிடிக்க உதவுகிறது. சம்பள நிலைகளைப் பற்றிய வழிகாட்டல் மற்றும் தொழில் ஆலோசனைகளையும் வழங்குகிறது.
மேலும் நிறுவனங்களுக்கு தகுதியான ஊழியர்களைக் கண்டறியும் சேவையை வழங்குகிறது.
11. HiresGulf
HiresGulf மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஒரு முன்னணி ஆன்லைன் வேலை தேடல் தளம். இது Horizon Group of Companies என்ற நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு (Oil & Gas), கட்டுமானம் (Construction), சுகாதாரம் (Healthcare), தகவல் தொழில்நுட்பம் (IT/Technology), விருந்தோம்பல் (Hospitality) உட்படப் பல துறைகளில் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
நிறுவனங்களுக்கு மிகவும் பொருத்தமான விண்ணப்பதாரர்களைக் கண்டறிய AI-ஐப் பயன்படுத்துகிறது. நிறுவனங்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வசதி. விண்ணப்பதாரர்கள் தங்கள் சுய அறிமுக வீடியோவைப் பதிவேற்றும் வசதி உள்ளது.
12. Oliv
Oliv என்பது முக்கியமாக துபாய், அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள திறமையான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமீபத்தில் பட்டம் பெற்றவர்களை இன்டர்ன்ஷிப் (பயிற்சி) மற்றும் வேலைகளுடன் இணைக்கும் ஒரு தளமாகும்.
இன்டர்ன்ஷிப் மற்றும் பட்டதாரி வேலை வாய்ப்புகளை கண்டறியலாம். Oliv Academy மூலம் CV எழுதுதல், நேர்காணல் தயாரிப்பு உட்பட இலவச வீடியோ படிப்புகள் மற்றும் நிபுணர் ஆலோசனைகளைப் பெறலாம்.
CareerPro என்ற கட்டணச் சேவை மூலம் Resume, cover letter போன்றவற்றை தயாரிக்கலாம். Oliv தளத்தை 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
13. கல்ஃப் நியூஸ் கிளாசிஃபைட்ஸ் (Gulf News Classifieds):
Gulf News Classifieds வேலைவாய்ப்புப் பகுதி என்பது துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களின் உடனடி வேலை வாய்ப்புகள் மற்றும் பிற பணியிடங்களை வழங்கும் ஒரு தளமாகும்.
இதில் பல்வேறு துறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான முழு நேரம் (Full Time), பகுதி நேரம் (Part Time), பயிற்சி (Internship) மற்றும் தற்காலிக (Temporary) வேலை வாய்ப்புகளைக் கண்டறியலாம்.
தகவல் தொழில்நுட்பம் (IT), கணக்கு மற்றும் நிதி (Accounting & Finance), கட்டுமானம் (Construction), பொறியியல் (Engineering), விருந்தோம்பல் (Hospitality), கல்வி (Education), தளவாடங்கள் (Logistics), விற்பனை (Sales) உட்பட பல தொழில்துறைப் பிரிவுகள் உள்ளன.
வேலை அனுபவம் இல்லாதவர் முதல் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு ஏற்ப வேலைகளைப் பட்டியலிடும் வசதி உள்ளது. இத்தளத்தில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் வேலை வாய்ப்புகளைப் பதிவிடவோ அல்லது விளம்பரங்களை இடுகையிடவோ முடியும்.
அரசு வேலை வாய்ப்புகளுக்கு
துபாய் அரசு வேலைகளுக்கு
Dubai Careers என்பது துபாய் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வேலைத் தளமாகும் (Official Job Portal). துபாயில் உள்ள அரசு நிறுவனங்களில் வேலை தேடும் நபர்களுக்காக இது பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
துபாய் அரசாங்கத்தின் பல்வேறு துறைகள், ஆணையங்கள் மற்றும் நிறுவனங்களில் (Government Entities) உள்ள வேலை வாய்ப்புகளை மட்டுமே இது பட்டியலிடுகிறது.
Roads and Transport Authority (RTA), Dubai Customs, Dubai Culture, Dubai Health Authority (DHA), Dubai Municipality மற்றும் பல அரசாங்க அமைப்புகளின் வேலைகளை ஒரே இடத்தில் காணலாம். நிர்வாகம், நிதி, தகவல் தொழில்நுட்பம், இன்ஜினீயரிங், சுகாதாரம், சட்டம், ஊடகம் போன்ற பல்வேறு அரசுத் துறைகளில் வேலைகளைத் தேடலாம்.
நிரந்தர வேலை, தற்காலிக வேலைகள், பட்டதாரிகளுக்கான வேலைகள், இன்டர்ன்ஷிப்கள் (Internship) ஆகிய வாய்ப்புகள் உள்ளன. சில வேலைகள் ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கும். வெளிநாட்டவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் இருக்கும்.
ராஸ் அல் கைமா அரசு வேலைகளுக்கு
RAK Careers ராஸ் அல் கைமா எமிரேட்டின் அரசாங்க நிறுவனங்களில் வேலை தேடுபவர்களுக்கான அதிகாரப்பூர்வ தளமாகும். இதில் பல்வேறு துறைகளிலும் உள்ள காலியிடங்கள் பட்டியலிடப்படுகின்றன.
RAKEZ (Ras Al Khaimah Economic Zone) Careers: இது ராஸ் அல் கைமா பொருளாதார மண்டலத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளைக் காட்டுகிறது.
RAK Properties / RAK Ceramics: ராஸ் அல் கைமாவில் இயங்கும் பெரிய தனியார் துறையின் நிறுவனங்களான RAK Properties மற்றும் RAK Ceramics போன்றவையும் தனித்தனியாக வேலை வாய்ப்புப் பக்கங்களைப் பராமரிக்கின்றன.
RAK Transport Authority / RAK Hospital: ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் மற்றும் RAK மருத்துவமனை போன்றவையும் தங்களது இணையதளங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்புகளை வழங்குகின்றன.
அஜ்மான் அரசு வேலைகளுக்கு
Kawader இணையதளம் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அஜ்மான் எமிரேட் அரசாங்கத்தின் மனிதவளத் துறையின் (Human Resources Department – HRD) அதிகாரப்பூர்வப் பக்கமாகும். அஜ்மான் அரசாங்கத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் ஊழியர்களுக்கான தகவல்களை வழங்குகிறது. அஜ்மான் அரசாங்கத்தில் வேலை தேடும் நபர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தத் தளத்தில், ஊழியர்களுக்கான சுகாதாரக் காப்பீடு (Health Insurance), புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான பயிற்சித் திட்டங்கள் (Training Programs) போன்ற முக்கிய விவரங்களும் இருக்கும். இந்த இணையதளம் (Ajman HRD Kawader) அஜ்மான் அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலும் காலியாக இருக்கும் வேலைகளை ஒரே இடத்தில் காண்பிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் நிர்வாகம் மற்றும் அலுவலகப் பணிகள் (Administration and Office Support), மனிதவளம் (HR), நிதி மற்றும் கணக்கு (Finance and Accounting), தகவல் தொழில்நுட்பம் (Information Technology), பொறியியல் மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
புஜைரா மனிதவளத் துறை இணையதளம்
புஜைரா மனிதவளத் துறை இணையதளம் புஜைரா அரசின் மனிதவளத் துறையின் வேலை வாய்ப்பு தளம் ஆகும். புஜைரா அரசாங்கத்தில் வேலை தேடுபவர்களுக்குப் பதிவு செய்தல் மற்றும் வழிகாட்டுதல் உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது.
வேலை தேடும் நபர்கள் தங்களுடைய விவரங்களை அரசாங்கத்தின் தரவுத்தளத்தில் பதிவு செய்ய இது உதவுகிறது. புஜைரா அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் தற்போது காலியாக உள்ள வேலை வாய்ப்புகளைப் பார்க்க வழிவகுக்கிறது.
ஊழியர்கள் மற்றும் வேலை தேடுபவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சித் திட்டங்கள் பற்றிய தகவல்களும் இந்தத் தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
புஜைரா அரசின் மனிதவளத் துறையின் அதிகாரப்பூர்வ வேலை மற்றும் பயிற்சி வாய்ப்புகளைப் பெற விரும்புபவர்களுக்கான நுழைவாயில் இந்தத் தளமாகும். இதில் ‘ஃபுஜைரா கவாதிர் ஆப்’ (Fujairah Kawader App) என்ற மொபைல் செயலியும் உள்ளது.
நீங்கள் ஃபுஜைரா அரசாங்கத்தில் வேலை தேடி விண்ணப்பிக்க விரும்பினால், இந்தப் பக்கத்தில் உள்ள “சிக்னல் கடாலிப் வதீஃபா” (Register as Job Seeker) என்ற விருப்பத்தைப் பயன்படுத்திப் பதிவு செய்யலாம்.
ஷார்ஜா அரசு வேலைகளுக்கு:
ஷார்ஜா அரசின் மனிதவளத் துறை (DHR), அமீரகக் குடிமக்களை வேலைக்குத் தயார்படுத்துதல், பயிற்சி அளித்தல் மற்றும் அவர்களின் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகளைப் பரிந்துரைத்தல் போன்ற முழுமையான சேவைகளை வழங்குகிறது.
- வேலை தேடுபவர்களின் விண்ணப்பங்களை மின்னணு முறையில் பெறுதல்.
- அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்துப் பதிவு செய்தல்.
- சரியான சேவைகளைப் பயன்படுத்த, அவர்களின் தரவுகளை அவ்வப்போது புதுப்பிக்க உதவுதல்.
- தேவைகளுக்கு ஏற்ப தொழில் வழிகாட்டுதல் (Career Guidance) மற்றும் தொழில்சார் மறுவாழ்வு (Professional Rehabilitation) திட்டங்களை வழங்குதல்.
- நம்பிக்கையுடன் பணியில் சேர தேவையான தொழில்முறை அறிவு மற்றும் அனுபவத்தை வழங்குதல்.
- அரசு மற்றும் தனியார் துறைகளில் நடைமுறை வேலை அனுபவத்தைப் பெற அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குதல்.
- தேவையான திறன்களையும் நடைமுறை அனுபவத்தையும் பெற உதவுதல்.
- வேலை தேடுபவர்களின் தகுதி மற்றும் திறமைகளுக்கு ஏற்ப, அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள சரியான வேலைகளுக்கு அவர்களைப் பரிந்துரைத்தல்.
- பணியமர்த்தும் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களை நேர்காணலுக்கு அனுப்புதல் உள்ளிட்ட சேவைகளை இத்தளம் வழங்குகிறது.
- இந்தச் சேவைகள் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், info@hr.sharjah.ae என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளலாம் அல்லது 065078806 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் இத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு வேலை வாய்ப்புகளுக்கு
iRecruitment Portal ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மத்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு தளமாகும். இது Federal Authority for Government Human Resources (FAHR) என்ற மத்திய அரசு ஆணையத்தின் கீழ் செயல்படுகிறது.
அமீரகத்தின் மத்திய அரசின் அமைச்சகங்கள், ஆணையங்கள் மற்றும் கூட்டாட்சி நிறுவனங்களில் உள்ள அனைத்து வேலை வாய்ப்புகளையும் இதில் காணலாம். அமீரக மத்திய அரசின் வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
