அபுதாபி ஓபன் மாஸ்டர்ஸ் போட்டியின் ஒரு பகுதியாக, ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ‘Walk to Mars’ சவால் நவ.12 முதல் தொடங்கியது. அமீரகத்தின் 54வது ஆண்டையும், பூமி – செவ்வாய் இடையிலான 54 மில்லியன் கி.மீ. தூரத்தையும் குறிக்கும் இந்த முயற்சியில் நீங்கள் நடக்கும் ஒவ்வொரு அடியும் கணக்கில் எடுக்கப்படும். அபுதாபி ஓபன் மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 6 முதல் 15 வரை நடைபெறவுள்ளது.
மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டிகளின் உச்ச அமைப்புக் குழுவின் தலைவரான மாண்புமிகு ஷேக் தியாப் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இதனைத் தொடங்கி வைத்தார். அபுதாபி குதிரையேற்றக் கழகத்தில் நடந்த இந்த நிகழ்வில், தொழில் மற்றும் மேம்பட்டு தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் சுல்தான் பின் அகமது அல் ஜாபர், கல்வி அமைச்சர் சாரா பின் யூசுப் அல் அமிரி உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இலக்கு என்ன?
செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் இடையேயுள்ள 54 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தைக் கூட்டு முயற்சியில் கடப்பதே இதன் இலக்கு. அமீரகம் நிறுவப்பட்ட 54-வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும் இந்தத் தூரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு அடியும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்” (Every Step Makes a Difference) என்ற கருப்பொருளுடன், நாட்டின் 54-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
பங்கேற்பது எப்படி?
நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் மற்றும் பிற உடற்பயிற்சிகள் மூலம் அனைத்து வயதினரும் இதில் பங்கேற்கலாம். அனைத்துத் தரப்பு மக்களிடமும் தினசரி உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கம்.
பங்கேற்பாளர்கள் அமீரகம் முழுவதிலும் இருந்து தாங்கள் கடக்கும் தூரத்தை அபுதாபி மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டிகள் 2026 செயலி மூலம் பதிவு செய்து கண்காணிக்கலாம்.
விளையாட்டுப் போட்டிகள்:
மத்திய கிழக்கிலேயே மிகப் பெரிய பன்னாட்டுப் பல்துறை விளையாட்டு நிகழ்வான ஓபன் மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டிகள் அபுதாபி 2026-க்கு 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் அனுபவம் அல்லது உடல் தகுதி பற்றி கவலைப்படாமல் பங்கேற்கலாம்.
மேலும் தகவல் மற்றும் பதிவு செய்ய: https://abudhabimasters2026.com
