அமீரகத்தின் அனைத்து லூலூ ஹைப்பர் மார்க்கெட்டிலும்; UPI பரிவர்த்தனை தொடக்கம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து லூலூ ஹைப்பர் மார்க்கெட்டிலும், இந்தியாவின் UPI (Unified Payments Interface) பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக லூலூ குழுமம் (Lulu Group) அறிவித்துள்ளது.

78-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் சார்பாக துணை தூதுவர் ஏ. அமர்நாத், அபுதாபியில் உள்ள லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் தனது முதல் UPI பரிவர்த்தனையை மேற்கொண்டு சிறப்பித்தார். 

இதன் மூலம் அமீரகத்தில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் UPI செயலிகளான Gpay, PhonePe மற்றும் Paytm உள்ளிட்டவையை பயன்படுத்தி பணப்பரிவர்தனை மேற்கொள்ள இயலும். மேலும், ஒவ்வொரு வருடமும் அமீரகத்திற்கு பயணிக்கும்  10 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் இதனால் பயனடைவார்கள் என்றும், உள்ளூர் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று லுலு குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சைஃபி ரூபாவாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் UPI எனப்படுவது வெவ்வேறு வங்கிக்கணக்குகளை ஒரே செயலி மூலம் கட்டுப்படுத்த வழிவகை செய்யும் ஒரு தொழிநுட்பமாகும்.

அமீரகத்தில் UPI-யை பொறுத்தவரை முதல் முறையாக,  கடந்த பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியும், அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும் UPI மூலம் இயங்கும் Rupay கார்டு சேவையை அறிமுகப்படுத்தினர்

அன்றிலிருந்து இன்று வரை துபாயின் Mashreq வங்கி மற்றும் அல் மாயா சூப்பர் மார்க்கெட் போன்றவை UPI பரிவர்தனையை அங்கீகரிப்பதாக அறிவித்திருந்தனர், இதனைத்தொடர்ந்து அமீரகத்தின் முன்னணி குழுமமான லூலூவும் தற்போது அறிமுகப்படுத்தியிருப்பது  அமீரக வாழ் இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.