வலிமையான பாஸ்போர்ட்டாக 7வது ஆண்டாக முதலிடம் வகிக்கும் அமீரக பாஸ்போர்ட்; என்ன காரணம்?

Arton Capital வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 2 இடங்கள் முன்னேறி 67-வது இடத்தை பிடித்துள்ளது. அமீரக பாஸ்போர்ட் தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. 

சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையிலும், ஐக்கிய அரபு அமீரகம் பாஸ்போர்ட் வலிமையில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலக அளவில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

ஆர்டன் கேபிடல் (Arton Capital) நிறுவனம் வெளியிட்ட 2025-ஆம் ஆண்டிற்கான பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 

சரிவைச் சந்திக்கும் வல்லரசு நாடுகள்

2025-ஆம் ஆண்டு உலகளாவிய பயண சுதந்திரத்திற்கு ஒரு சவாலான ஆண்டாக அமைந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகளின் பாஸ்போர்ட்கள் இந்த ஆண்டு தங்களது வலிமையை இழந்துள்ளன. 

பாதுகாப்பு காரணங்கள் மற்றும் புதிய விசா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நாடுகள் தரவரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரிட்டன் 39-வது இடத்திற்கும், கனடா 40-வது இடத்திற்கும், அமெரிக்கா 41-வது இடத்திற்கும் சரிந்துள்ளன.

அமீரகத்தின் அசுர வளர்ச்சி

மற்ற நாடுகள் சரிவைச் சந்தித்தாலும், அமீரகம் தனது செல்வாக்கை மேலும் அதிகரித்துள்ளது. அமீரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மொத்தம் 179 நாடுகளுக்கு எளிதாகப் பயணம் செய்யலாம்.

இதில் 129 நாடுகளுக்கு விசா இல்லாமல்  செல்லலாம். 45 நாடுகளுக்கு ஆன் அரைவல் விசாவை (Visa on Arrival) பெற்றுக்கொள்ளலாம்.

வலிமைக்குக் காரணம் என்ன?

தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய வெளியுறவுக் கொள்கையே முக்கியக் காரணம் என்று ஆர்டன் கேபிடல் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்மண்ட் ஆர்டன் தெரிவித்துள்ளார். மற்ற நாடுகளுடன் அமீரகம் கொண்டுள்ள சுமூகமான தூதரக உறவுகள் மற்றும் பொருளாதார ரீதியான அதன் முக்கியத்துவம், பிற நாடுகள் அமீரக குடிமக்களுக்கு எளிதான பயண அனுமதியை வழங்க தூண்டுகிறது.

மேலும், அமீரகம் வழங்கும் 10 ஆண்டுகால ‘கோல்டன் விசா’ திட்டம், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழிலதிபர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, சர்வதேச அளவில் அதன் கௌரவத்தையும் உயர்த்தியுள்ளது.

பிற நாடுகளின் முன்னேற்றம் & பின்னேற்றம்

சிங்கப்பூர் பாஸ்போர்ட் 30-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மலேசியா பாஸ்போர்ட் முதல் முறையாக டாப்-20 பட்டியலுக்குள் நுழைந்து 17-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை  டாப் பட்டியலில் இருந்தாலும், கடந்த ஆண்டை விட அவற்றின் வலிமை சற்றே குறைந்துள்ளது.