அமீரகத்தில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் அரசாங்கம் பல புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
10 போக்குவரத்து மாற்றங்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் முக்கியமான 10 போக்குவரத்து மாற்றங்களை காணலாம்.
1. அபுதாபி ‘தர்ப்’ (Darb) சுங்கக் கட்டண மாற்றம்
அபுதாபியில் செப்டம்பர் 1, 2025 முதல் மாலை நேர சுங்கக் கட்டண (Toll) நேரம் மாற்றப்பட்டுள்ளது. முன்பு மாலை 5 மணி முதல் 7 மணி வரை வசூலிக்கப்பட்ட கட்டணம், இனி மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை வசூலிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டணம் கிடையாது.
2. அபுதாபியில் மாறும் வேகக் கட்டுப்பாடு (Variable Speed Limit)
ஷேக் சயீத் பின் சுல்தான் சாலையில் புதிய டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இவை சாலை நெரிசல், வானிலை மற்றும் விபத்துகளுக்கு ஏற்ப அவ்வப்போது அனுமதிக்கப்பட்ட வேக அளவை மாற்றிக்கொண்டே இருக்கும்.
3. துபாயில் டெலிவரி பைக்குகளுக்கு கட்டுப்பாடு
நவம்பர் 1, 2025 முதல் டெலிவரி பைக்குகள் அதிவேகப் பாதைகளில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 அல்லது அதற்கு மேற்பட்ட பாதைகள் கொண்ட சாலைகளில், இடதுபுறம் உள்ள முதல் இரண்டு பாதைகளில் டெலிவரி பைக்குகள் செல்லக்கூடாது.
4. ஷார்ஜாவில் பிரத்யேகப் பாதைகள்
ஷார்ஜாவில் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு என தனித்தனி பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இடதுபுறம் உள்ள அதிவேக பாதையை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
5. அஜ்மானில் ‘ஸ்மார்ட்’ வேகக் கட்டுப்பாடு
அஜ்மானில் உள்ள டாக்ஸி மற்றும் லிமோசின் கார்களில் தானியங்கி வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அந்தந்த சாலையின் வேக வரம்பிற்கு ஏற்ப வாகனத்தின் வேகத்தை தானாகவே குறைக்கும்.
6. அபுதாபியில் லாரிகளுக்கு தடை
டிசம்பர் 1, 2025 முதல் அபுதாபியின் முக்கிய சாலைகளான E10 மற்றும் E11-ல் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை மாற்றுப் பாதையான E75 சாலைக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.
7. புதிய ‘தொடர் வெள்ளைக் கோடு’ (Solid Lines)
துபாயின் முக்கிய சாலைகளில் (Ittihad Road, Airport Tunnel போன்றவை) புதிய தொடர் வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. இந்தக் கோட்டைத் தாண்டிச் செல்வதோ அல்லது லேன் மாறுவதோ சட்டப்படி குற்றம். இதை மீறினால் AED 400 அபராதம் விதிக்கப்படும்.
8. துபாய் டாக்ஸி கட்டண உயர்வு
ஸ்மார்ட் ஆப் மூலம் புக் செய்யப்படும் டாக்ஸிகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் AED 12-லிருந்து, AED 13 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், உச்சப்பட்ச நேரங்களில் (Peak Hours) கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படும்.
9. பார்க்கிங் இடங்களில் கண்காணிப்பு
துபாய் காவல்துறை மற்றும் பார்கின் நிறுவனம் (Parkin) இணைந்து புதிய முறையைக் கொண்டு வந்துள்ளன. இனி பார்க்கிங் செய்யும்போது, உங்கள் கார் மீது பழைய அபராதங்கள் அல்லது பிடிவாரண்ட் இருந்தால் காவல்துறைக்கு உடனே தகவல் சென்றுவிடும்.
10. மசூதி பார்க்கிங் இடங்களில் கட்டணம்
துபாயில் உள்ள மசூதிகளின் பார்க்கிங் பகுதிகள் இனி 24 மணி நேரமும் கட்டணப் பார்க்கிங்காக மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும், தொழுகை நேரத்தின் போது 1 மணி நேரம் இலவசமாக பார்க்கிங் செய்யலாம். மற்ற நேரங்களில் மண்டலத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
