பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடும் என்பதை 2025ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் ஐக்கிய அரபு அமீரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் அமீரகம்:
ஒரு காலத்தில் எண்ணெய் வர்த்தகத்தை மட்டுமே நம்பி இருந்த ஐக்கிய அரபு அமீரகம் இன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது. அதனால் மத்திய கிழக்கு நாடுகளில் மிகச் செழுமையான நாடாக அமீரகம் மாறியுள்ளது. அதுமட்டுமின்றி உலக நாடுகளுடன் போட்டி போடும் வகையில் பொருளாதாரத்தில் அமீரகம் வேகமாக வளர்ந்து வருகிறது.
2025ஆம் ஆண்டில் எண்ணெய் அல்லாத துறைகளின் வளர்ச்சி, வலுவான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடு குறித்த தரவுகள் அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சான்றாக அமைந்துள்ளன.
2025ஆம் ஆண்டின் மைல்கல் சாதனைகள்
- 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் எண்ணெய் அல்லாத வெளிநாட்டு வர்த்தகம் 24.5 சதவீதம் உயர்ந்து. இதன் மதிப்பு AED 1.7 டிரில்லியன் ஆகும். இது உலகளாவிய வளர்ச்சி விகிதத்தை விட சுமார் 14 மடங்கு அதிகம்.
- அமீரக மத்திய வங்கியின் (CBUAE) தரவுகளின்படி, 2025 செப்டம்பர் இறுதியில் வங்கியின் மொத்த சொத்துக்கள் AED 5,199.9 பில்லியனாக அதிகரித்துள்ளன. அதே காலகட்டத்தில் அமீரக மத்திய வங்கி AED 2,478.8 பில்லியன் கடன் வழங்கியுள்ளது.
- 2025ஆம் ஆண்டின் முதல் அரை ஆண்டு காலத்தில், அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.2% வளர்ச்சி பெற்று AED 929 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதில் எண்ணெய் அல்லாத துறைகள் 5.7% வளர்ச்சி அடைந்து AED 720 பில்லியன் ஆக உயர்ந்துள்ளன. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 77.5% பங்கைக் கொண்டுள்ளது.
- அமீரக அரசு 2026 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டாக AED92.4 பில்லியனை ஒதுக்கியுள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகையாகும்.
- அமீரகத்தின் தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சகம், நாட்டின் தேசிய வங்கிகளுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின் மூலம், AED 40 பில்லியனுக்கும் அதிகமான நிதி உதவி தொழில் துறைக்கு வழங்கப்பட உள்ளது.
- 2025 ஜனவரி முதல் நவம்பர் இறுதி வரை 220,000க்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 36,000 க்கும் மேற்பட்ட புதிய வர்த்தக முத்திரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது முந்தைய ஆண்டை விட 48.2% அதிகமாகும்.
- இந்த ஆண்டு அமீரக சுற்றுலாத்துறை AED 257.3 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது இது தேசிய பொருளாதாரத்தில் 13% பங்களிப்பை கொண்டுள்ளது.
