அமீரகத்தில் Pre-K, KG 1, KG 2 மற்றும் Grade 1 வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான வயது தகுதி (Age Cut-off) ஆகஸ்ட் 31 ஆக இருந்த நிலையில், தற்போது டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு விதிகளில் மாற்றம்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான வயது வரம்பு விதிகளில் அரசு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. வரும் 2026-2027 கல்வியாண்டு முதல், மழலையர் பள்ளி (KG) மற்றும் Grade 1-ல் சேருவதற்கான வயது தகுதி (Age Cut-off) மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தற்போது அமலில் உள்ள ஆகஸ்ட் 31-க்குப் பதிலாக, டிசம்பர் 31-ஆம் தேதியைக் கணக்கிட்டு வயது நிர்ணயம் செய்யப்படும். அதாவது, ஒரு குழந்தை பள்ளியில் சேர வேண்டிய ஆண்டில் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட வயதை எட்டியிருக்க வேண்டும். இதனால் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பிறந்த குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதியின்படி, டிசம்பர் 31-ஆம் தேதி தகுதிக்கான தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, டிசம்பர் 31-க்குள் தேவையான வயதை எட்டும் குழந்தைகளை அந்த ஆண்டிலேயே பள்ளியில் சேர்த்துக் கொள்ளலாம்.
புதிய வயது வரம்பு அட்டவணை
ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் பள்ளிகளுக்கு (பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் சர்வதேச பாடத்திட்டங்கள்) கீழ்வரும் வயது வரம்பு பொருந்தும்:
Pre-K / FS1: டிசம்பர் 31-க்குள் 3 வயது நிறைந்திருக்க வேண்டும்.
KG1 / FS2: டிசம்பர் 31-க்குள் 4 வயது நிறைந்திருக்க வேண்டும்.
KG2 / Year 1: டிசம்பர் 31-க்குள் 5 வயது நிறைந்திருக்க வேண்டும்.
Grade 1 / Year 2: டிசம்பர் 31-க்குள் 6 வயது நிறைந்திருக்க வேண்டும்.
இந்தியப் பாடத்திட்டப் பள்ளிகளுக்கு இது பொருந்துமா?
தற்போதைய நடைமுறையின்படி ஏப்ரல் மாதத்தில் கல்வி ஆண்டைத் தொடங்கும் இந்தியப் பாடத்திட்டப் பள்ளிகளில் மார்ச் 31-ஆம் தேதியை கட்-ஆஃப் தேதியாக தொடர்ந்து பின்பற்றும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த மாற்றம் 2026-2027 கல்வியாண்டில் புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு பொருந்தும். ஏற்கனவே பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது. அவர்கள் பழைய விதிகளின்படியே தொடரலாம்.
வெளிநாடுகளில் இருந்தோ அல்லது வேறு பாடத்திட்டங்களில் இருந்தோ மாறும் மாணவர்களுக்கு, அவர்கள் கடைசியாக படித்து முடித்த வகுப்பின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.
இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன?
சுமார் 39,000 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த வயதில் (3 வயது) பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்குப் படிப்புத் திறன் சிறப்பாக இருப்பது கண்டறியப்பட்டது.
பல்வேறு சர்வதேசப் பாடத்திட்டங்களுக்கு இடையே மாணவர்களின் சேர்க்கையில் ஒருமைப்பாட்டைக் கொண்டு வர இது உதவும். குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் சமூக உணர்வு வளர்ச்சியில் வயது ஒரு காரணியாக இருந்தாலும், முன்கூட்டியே கல்வியைத் தொடங்குவது அவர்களுக்குச் சாதகமாக அமையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அமீரகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மேக்கப் போடக்கூடாது, கருப்பு காலணிகள் அணிய வேண்டும் உள்ளிட்ட 10 ஆடை கட்டுப்பாடு விதிகளை கல்வி அமைச்சகம் வெளியிட்டிருந்தது.
