துபாயின் மூன்று முக்கிய மால்களில், மாற்றப்படும் பார்க்கிங் திட்டம்; எளிமையாகும் சேவை

ஜனவரி 01, 2025 முதல் புதிய பார்க்கிங் கட்டணம் நடைமுறையை துபாயின் முக்கிய மால்களில் நடைமுறைப்படுத்துகிறது parkin நிறுவனம்.

துபாயின் முன்னணி பார்க்கிங் ஆபரேட்டரான parkin நிறுவனம் மற்றும் Majid Al Futtaim (MAF) நிறுவனம் இணைந்து “barrierless parking” எனும் இந்த திட்டத்தை  Mall of the Emirates (MoE), தேரா சிட்டி சென்டர் மற்றும் சிட்டி சென்டர் மிர்டிஃப் ஆகிய மால்களில் அமல்படுத்துகின்றன.

இதனால் பார்க்கிங் கட்டணங்களில் எந்த மாறுதல்களும் இல்லை என்றும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

என்ன மாற்றங்கள்?

இந்த புதிய திட்டம் மூலம்  பார்க்கின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்கள் இனி கார்களுடன் காத்திருக்க வேண்டிய தேவை நீங்குகிறது.

நவீன கேமராக்கள் கார்களின் நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்து அது உள்ளே வரும் நேரம் மற்றும் வெளியேறும் நேரத்தை பதிவு செய்துகொள்ளும்.

பார்க்கிங் பகுதியில் நுழைந்தவுடனே குறுஞ்செய்தி மூலமோ அல்லது பார்க்கின் ஸ்மார்ட் செயலி மூலமோ பார்க்கிங் கட்டணங்கள் குறித்து அறிவிக்கப்படும். பின்னர், அக்கட்டணத்தை செயிலியிலே செலுத்திக் கொள்ளவும் முடியும்.

இந்த மூன்று மால்களிளும் இருக்கும் 21,000 பார்க்கிங் இடங்களில், ஒரு  வருடத்திற்கு சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமான கார்களை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது அப்துல்லா அல் அலி இதுகுறித்து கூறுகையில், எங்களின் இந்த புதிய தொழில்நுட்பம் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பயனர் அனுபவத்தை நன்கு மேம்படுத்தும் என்று தெரிவித்தார்.