துபாயில் நவம்பர் 24 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இரண்டு புதிய சுங்கச்சாவடிகள்

துபாயில் இரண்டு புதிய சுங்கச்சாவடிகளை Salik வருகின்ற நவம்பர் 24 முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. பிசினஸ் பே மற்றும் அல் சஃபா தெற்கு பகுதிகளில் இவை அமையும் என ஆகஸ்ட் 28 அன்று அறிவிக்கப்பட்டிருந்தது, தற்போது இவை நடைமுறையாகவுள்ளதை Salik உறுதிபடுத்தியுள்ளது, இதன் மூலம் துபாயில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கின்றன.

புதிய சுங்கச்சாவடிகளின் நோக்கம்

பிசினஸ் பே சுங்கச்சாவடி அல் கெய்ல் சாலையில் 15% வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் எனவும், அல் சஃபா சுங்கச்சாவடி ஷேக் சயத் சாலையில் சுமார் 4% வரை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்துடனும், ஷேக் சயத் சாலை, அல் கெய்ல் சாலை போன்ற முக்கிய சாலைகளில் வாகன ஓட்டத்தை சீராக்க உதவும் என துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையும் தெரிவித்துள்ளது.

Salik-ன் வருவாய் எதிர்பார்ப்புகள்

இதன் மூலம் இவ்வாண்டு முதல் Salik, புதிய கட்டணங்களில் இருந்து 7-8% வருவாய் அதிகரிப்பை எதிர்பார்க்கின்றது. பிசினஸ் பே பகுதியில் வருவாய் AED 2.26 பில்லியன் மற்றும் அல் சஃபா தெற்கு பகுதியில் AED 469 மில்லியன் எனவும் மதிப்பீடு செய்துள்ளது.

கட்டணத்தில் மாற்றம் இருக்காது
சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளை மறுத்து, Salik சிறப்பு கட்டணத்தை (surge pricing) அறிமுகப்படுத்தவில்லை எனவும் இந்த புதிய சுங்கச்சாவடிகளில் பிரதான நேரங்களில் கட்டண உயர்வு இருக்காது எனவும் Salik உறுதிபடுத்தியுள்ளது.