தனிப்பட்ட காரணங்களால் திருமணத்தை ரத்து செய்த மணப்பெண், திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் மீது, தான் செலுத்திய AED 11,800-ஐ திருப்பித் தருமாறு தொடர்ந்த வழக்கை அபுதாபி நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வழக்கின் பின்னணி
மனுதாரரான மணமகள், தன்னுடைய திருமண நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்காக திருமண திட்டமிடல் (Event Management) நிறுவனத்துக்கு AED 11,800 பணம் கொடுத்திருந்ததாகவும், எதிர்பாராத சில தனிப்பட்ட காரணங்களால் திருமணம் நின்றுவிட்டதால், அந்த நிறுவனம் பணத்தை திருப்பித் தரவேண்டும் என்றும், கூடுதலாக AED 20,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
நீதிமன்ற தீர்ப்பு
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரருக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்யும் நிறுவனத்துக்கும் இடையே நேரடி ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை எனவும், மணமகள் சமர்ப்பித்த ஆவணம், இந்த வழக்குக்கு தொடர்பில்லாத வேறொரு நபருடன் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், எனவே இந்த ஆவணம் வழக்கில் செல்லாது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், பணம் அனுப்பப்பட்டதை உறுதி செய்யும் ஆவணங்கள், ஒப்பந்த படிவம் அல்லது சட்டப்பூர்வமாக பணம் செலுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கின் முடிவு
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை முழுமையாக நிராகரித்த நீதிமன்றம், மனுதாரரே நீதிமன்றச் செலவுகளையும், வழக்கு செலவுகளையும் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.
