அமீரக உள்துறை அமைச்சகம், சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் “விபத்தில்லா நாள்” என்ற சிறப்பு முயற்சியை அறிவித்துள்ளது. இந்த திட்டம், புதிய கல்வியாண்டின் தொடக்கமாகும் ஆகஸ்ட் 25, 2025 அன்று நடைபெறவுள்ளது.
கருப்பு புள்ளிகள் குறைக்கப்படும்:
இந்த திட்டத்தின் கீழ், ஓட்டுநர்கள் பாதுகாப்பான ஓட்டுநர் நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டு ஆகஸ்ட் 25 அன்று விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்கினால், அவர்களின் கருப்பு புள்ளிகளில் (Black Points) இருந்து, 4 புள்ளிகள் குறைக்கப்படும்.
“பாதுகாப்பான கல்வி ஆண்டு” என்ற பிரச்சாரத்தின் கீழ், போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், பள்ளிகள் திறக்கும் நாளில் கொண்டுவரப்பட்ட“விபத்தில்லா நாள்” திட்டம், இந்த ஆண்டும் பள்ளிகள் திறக்கும் நாளான ஆகஸ்ட் 25 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்நாள் அனைத்து சாலைப் பயனாளிகளுக்கும் போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பங்கேற்பது எப்படி?
இந்த முயற்சியில் பங்கேற்க, ஓட்டுநர்கள் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில், (https://portal.moi.gov.ae/eservices/direct?scode=716&c=2)
சென்று, விபத்தில்லாத தினத்தை கடைப்பிடிக்க உறுதிமொழி ஏற்பதை பதிவு செய்ய வேண்டும்.
ஆகஸ்ட் 25-க்கு முன்பதிவு செய்து, விதிமுறைகளை பின்பற்றும் ஓட்டுநர்களின் கருப்பு புள்ளிகள் செப்டம்பர் 15, 2025 அன்று தானாகவே குறைக்கப்படும். இதற்காக எந்த சேவை மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை.
கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:
- சீட் பெல்ட் அணிவது
- வேக வரம்புகளைப் பின்பற்றுவது
- முன் செல்லும் வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தைக் கடைப்பிடிப்பது
- வாகனத்தை இயக்கும் போது போன் பேசுவதை தவிர்ப்பது
- பாதசாரிகள் & அவசர சேவை வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுத்தல் ஆகிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
திட்டத்தின் நன்மைகள்:
ஓட்டுநர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நான்கு கருப்புப் புள்ளிகளைக் குறைத்துக்கொள்ளலாம். பொதுவாக, 24 கருப்புப் புள்ளிகளைப் பெறும் ஓட்டுநர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். அதிகமான கருப்புப் புள்ளிகளை வைத்திருப்பவர்களுக்கு, இந்தச் சலுகையின் மூலம் உரிமம் ரத்து செய்யப்படுவது தவிர்க்கப்படும்.
விழிப்புணர்வு & பாதுகாப்பு நடவடிக்கைகள்
‘விபத்தில்லா நாள்’ முன்னிட்டு, பொதுமக்கள் மத்தியில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், காவல்துறையினர் கூடுதலாக அந்தப் பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள். இது ஓட்டுநர்களுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பான சாலைப் பயணத்தை உறுதி செய்யும்.
