இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ஐக்கிய அரபு அதிபர் வாழ்த்து தெரிவித்தார்.
புர்ஜ் கலிஃபாவில் இந்திய பிரதமரின் உருவம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் அவரது புகைப்படங்கள் ஒளிர விடப்பட்டது. உலகின் உயரமான இக்கட்டடத்தில் மோடி அவர்களின் உருவங்கள் மற்றும் “ஹேப்பி பர்த்டே” எனும் வார்த்தைகள் ஒளிர்ந்தன. மேலும் பல்வேறு நிறங்களில் அந்த ஒளிகள் மாறிக்கொண்டே இருந்தன.
அதுமட்டுமின்றி இந்திய தேசிய கொடியும் புர்ஜ் கலிஃபாவில் ஒளிர விடப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்றும் இதே போல் தேசிய கொடி ஒளிர விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மாண்புமிகு ஷெய்க் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் தனது டிவிட்டர் வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்குச் சிறந்த உடல்நலம், மகிழ்ச்சி பெறவும் மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்தையும் அங்குள்ள மக்களின் செழிப்பை முன்னேற்றுவதில் தொடர்ந்து வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன், என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி பதில்
இதற்கு பிரதமர் மோடி, “உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி, சகோதரா. நமது நெருக்கமான நட்பையும், அனைத்து துறைகளிலும் உயரம் பெறும் இந்தியா–ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாண்மையையும் நான் ஆழமாக மதிக்கிறேன்” என பதிலளித்தார்.
மேலும், ரஷ்யா, இஸ்ரேல், இத்தாலி மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த உலகத் தலைவர்களும், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். உலக அரங்கில் இந்தியாவின் எழுச்சிக்கு அவரது தலைமை, தொலைநோக்கு மற்றும் பங்களிப்பை பற்றியும் பாராட்டினர்.
