பொதுமக்கள் குண்டும் குழியுமான சாலை, சாலை குறுக்கே முறிந்து விழுந்த மரம் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் அனைத்தையும் குறித்து புகைப்படம் எடுத்து Dubai Now செயலியில் Madinati எனும் இந்த சேவையை பயன்படுத்தி புகாரளிக்கும் சேவை துபாயில் துவங்கவுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த செயலியில், பொது மக்கள் அளித்த அனைத்து புகார்களும் உறுதி செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிமாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலையில் கிடக்கும் தேவையற்ற பொருட்கள் குறித்தும், புகைப்படத்துடன் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பொது மக்கள் தங்களின் அன்றாட வாழ்வியலில் பயணித்துக்கொண்டே துபாய் நகர மேம்பாட்டிற்கு உதவலாம்.
Madinati சேவை, டிஜிட்டல் துபாய் மற்றும் சாலைகள் & போக்குவரத்து ஆணையத்தின் கூட்டு முயற்சியாகும். இதன் மூலம் நகரில் வாழும் அனைத்து மக்களுக்கும் மேம்பட்ட அனுபவத்தை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, குண்டும் குழியுமான சாலை, சாலை குறுக்கே முறிந்து விழுந்த மரம் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக வேறு ஏதேனும் பொருட்களை பார்த்து புகைப்படம் எடுத்து செயலியில் பதிவேற்றம் செய்தால் AI அதனை ஸ்கேன் செய்து எந்த வழித்தடம் என்பதை உறுதி செய்த பின்னர் அதனை RTA அல்லது நகராட்சிக்கு அனுப்பி வைக்கும் என டிஜிட்டல் துபாய் தலைமை நிர்வாக அதிகாரியான மாதர் அல் ஹெமெய்ரி கூறுகிறார்.
பொது மக்களுக்கு ஏதுவாக தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, சிறந்த அனுபவத்தை உருவாக்குவதே எங்களின் கடமையாக கருதுகிறோம் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த செயலி மூலம் பொதுமக்கள் புகைப்படம் பகிர்ந்தாலே போதும் எனவும் தொழில்நுட்பமே அது எந்த இடம் என்பதை கண்டறியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Madinati சேவையை 45-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து பயன்படுத்தி, 280 சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
