அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வசித்தால் அபராதம்; அபுதாபி மக்களுக்கு எச்சரிக்கை

அபுதாபியில் குடியிருப்பு கட்டிடங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் அதிகமானோர் வசித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறை (DMT) எச்சரித்துள்ளது. 

வாடகை உயர்வு: 

அமீரகத்தில் பல தொழில்துறை நிறுவனங்கள் செயல்படும் முக்கிய நகரமாக அபுதாபி திகழ்கிறது. இதனால் வேலைக்காக வெளிநாடுகளிலிருந்து பலர் அபுதாபியை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக குடியிருப்பு கட்டிடங்களின் வாடகை உயர்ந்து வருகிறது.

வாடகைச் செலவை குறைக்க, பலர் அறைகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பகிர்ந்து வசிக்கும் முறையைத் தேர்வு செய்கிறார்கள். இந்த முறையில், ஒரே அறையில் தங்கும் மக்கள் வாடகையைப் பகிர்ந்து செலுத்துகின்றனர். 

சட்டவிரோதமாக தங்க அனுமதி

இந்த பகிர்ந்து வசிக்கும் முறையில் வாடகைச் செலவு குறையும் என்றாலும், சில கட்டிட உரிமையாளர்கள் ஒரே அறையில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை சட்டவிரோதமாக தங்க அனுமதித்து வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் தீவிபத்து, நிலநடுக்கம் போன்ற பேரழிவு ஏற்பட்டால், கட்டிடத்தில் உள்ளவர்கள் வெளியேறுவது கடினமாக மாறி, பெரும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.

உங்கள் வீடு, உங்கள் பொறுப்பு

அபுதாபியில் குடியிருப்பு பகுதிகளின் பாதுகாப்பு தரத்தை உயர்த்தவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அபுதாபி நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (DMT) 2022 டிசம்பர் 22 அன்று ‘உங்கள் வீடு, உங்கள் பொறுப்பு’ என்ற பாதுகாப்பு பிரச்சாரத்தை தொடங்கியது.

இந்த பிரச்சாரத்தின் படி, ஒரே குடியிருப்பு கட்டிடத்தில் அதிகமான நபர்களை தங்க அனுமதித்தால், 2019ஆம் ஆண்டின் சொத்து மற்றும் குடியிருப்பு சட்டம் எண் 8-இன் அடிப்படையில் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.

விதிகளை மீறினால் அபராதம் 

2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த சட்டம் தீவிரமாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் முதல் முறை விதிகளை மீறுபவர்களுக்கு AED 5,000 முதல் AED 500,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

இரண்டாவது மற்றும் அதற்கு மேற்பட்ட முறை விதிகளை மீறுபவர்களுக்கு AED 1 மில்லியன் வரை அபராதம் என்று அபுதாபி நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (DMT) எச்சரித்தது. 

இதனைத் தொடர்ந்து, அபுதாபி நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை தற்போது மீண்டும் ‘உங்கள் வீடு, உங்கள் பொறுப்பு’ பிரச்சாரத்தை மக்களுக்கு நினைவூட்டியுள்ளது. 

அதன்படி, ஒரே குடியிருப்பு பகுதியில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமானோர் வசித்தால், AED 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று குடியிருப்பாளர்களுக்கும் கட்டிடம் உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.