துபாய் சுற்றுலாத் துறை 2025 ஆம் ஆண்டுக்கான நிகழ்வுகள் மற்றும் விடுமுறை நாட்கள் கொண்ட காலெண்டரை வெளியிட்டுள்ளது. இதில் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கொண்டாடும் விதமாக ஷாப்பிங், பொழுதுபோக்கு, கலாச்சாரம் என எண்ணற்ற பிரிவுகளில் நிகழ்வுகள் வரிசைக்கட்டவுள்ளன.
ஜனவரி முதலே துவங்கவிருக்கும் நிகழ்வுகள், டிசம்பர் வரையில் மொத்தம் 14 வெவ்வேறு நிகழ்வுகளாக நடைபெறவுள்ளது.
துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல்
ஆண்டின் துவக்கத்திலேயே மிகவும் சிறப்புமிக்க துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் ஜனவரி 12, 2025 வரை நீடிக்கவுள்ளது, டிசம்பர் 6, 2024 துவங்கிய இந்நிகழ்வு வருடத்தின் முதல் நிகழ்வாக பட்டியலிடப்பட்டுள்ளது.
நிகழ்வின் கடைசி வார இறுதியில், நாடு முழுவதும் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட கடைகளில் 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை விற்பனை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனப் புத்தாண்டு
Spring Festival என்று அழைக்கப்படும் சீன புத்தாண்டு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெறவுள்ளது. சீனப் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நகரம் முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெறும். இதில், பல்வேறு நேரடி பொழுதுபோக்கு நிகழ்வுகள், சிறப்பு விளம்பரங்கள், கண்கவர் வானவேடிக்கைகள், கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் பிரத்தியேக உணவுகள் இடம் பெற்றிருக்கும்.
துபாய் ஃபேஷன் சீசன்
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள ஃபேஷன் பிரியர்களுக்காக, துபாய் ஃபேஷன் சீசன் 2025 ஆம் ஆண்டில் trendsetting நகரத்திற்கு வரவுள்ளது. Spring/Summer கலக்ஷன் வெளியீடு அடுத்த ஆண்டு முதல் மற்றும் இரண்டாம காலாண்டில் காண்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Fall/Winter கலக்ஷன் வெளியீடு 2025 ஆம் ஆண்டின் மூன்று மற்றும் நான்காம் காலாண்டில் காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரமலான் மற்றும் ஈத் அல் பித்ர்
2025 ஆம் ஆண்டுக்கான புனித ரமலான் மாதம் மற்றும் ஈத் அல் பித்ர், பிப்ரவரி 28 முதல் ஏப்ரல் 06 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பருவத்தில் நாடு முழுக்க பல்வேறு சமூக நிகழ்ச்சிகள், கலை ஓவியங்கள், வண்ண விளக்குகள் மற்றும் இரவு சந்தைகளுடன் நாடு முழுக்க திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், ஈத் அல் பித்ர் காலத்தில் மலிவான விலையில் ஷாப்பிங், கொண்டாட்டங்கள் போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.
E-sale discounts
மூன்று நாள் இ-சேல் தள்ளுபடி விற்பனையானது, ஷாப்பிங் செய்பவர்களுக்கு 30 சதவீதத்தில் இருந்து 95 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். ஆடைகள், ஆடம்பர அழகுசாதனப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான தயாரிப்புகளில் சலுகைகள் இருக்கும்.
Dubai Games and Digital Sports
துபாய் கேமிங் மற்றும் E ஸ்போர்ட்ஸின் முன்னணி மையமாக இருப்பதால், ஏப்ரல் 25 முதல் மே 11 வரை சிறப்பு நிகழ்வுகளை நடத்துகிறது. இதனை தவிர்த்து, ‘கேம் எக்ஸ்போ’ எனப்படும் சிறப்பு கல்வி முயற்சிகள் மே 7 மற்றும் 8 தொடங்கப்படும். ‘கேம் எக்ஸ்போ உச்சி மாநாடு’ மே 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறும். மேலும், மே 9 முதல் 11 வரை துபாய் உலக வர்த்தக மையத்தில் உள்ள ஜபீல் அரங்குகள் 2 மற்றும் 3 இல் ‘கேம் எக்ஸ்போ’ கண்காட்சி நடைபெறவுள்ளது.
3 Day Super Sale
முக்கிய ஷாப்பிங் நிகழ்வுகளுள் ஒன்றான, 3 Day Super Sale முதல் பதிப்பு மே மாதத்தில் நடைபெறும் மற்றும் இரண்டாவது பதிப்பு நவம்பர் 2025 இல் நடைபெறும். இதில் ஆடைகள், காலணிகள், பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை சலுகைகள் இருக்கும்.
ஈத் அல் அதா
ஜூன் 2 முதல் 8 வரை ஈத் அல் பித்ர் பண்டிகை கொண்டாடப்படுகிறது, இந்த விழாக் காலத்தின் போது ஷாப்பிங் மால்களில் தள்ளுபடிகள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் பல்வேறு சுவையான உணவுகள் நாடு முழுக்க கிடைக்கும்.
துபாய் கோடைகால ஆச்சரியங்கள்
பொதுவாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் அந்த வெப்ப காலத்திற்கு ஏற்ப நிகழ்வுகளை அப்போது எதிர்பார்க்கலாம். இது ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைபெறவுள்ளன.
Back to School season
கோடை விடுமுறை நிறைவடைந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் பருவத்தில், பள்ளி பொருட்கள் மற்றும் தேவைகளை வாங்குவதற்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்படும். துபாய் முழுவதும் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் ஆகஸ்ட் 04 முதல் 28 வரை விற்பனையை நடத்துவார்கள்.
Home Festival
வெப்பம் சற்றே குறையத் துவங்கும் இந்த பருவத்தில், துபாய் ஹோம் ஃபெஸ்டிவல் நடைபெறுகிறது, இது வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளை வழங்குகிறது. அக்டோபர் 3 முதல் 16 வரை இந்த பருவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி கொண்டாட்டங்கள்
தீபாவளி பெருநாள் எப்போதும் துபாயில் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் ஒரு பருவம். இந்த கொண்டாட்டத்தில் நகரில் முக்கிய நிகழ்வுகள், விழாக்கள் மற்றும் தள்ளுபடிகளை குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம். அக்டோபர் 17 முதல் 26 வரை இந்த பருவம் அரங்கேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dubai Fitness Challenge
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை குடியிருப்பாளர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது, நவம்பர் 1 முதல் 30 வரை துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை இந்த நிகழ்வு அறிவுறுத்துகிறது.
தேசிய தின கொண்டாட்டங்கள்
டிசம்பர் 1 முதல் 3 வரை, தேசிய தின கொண்டாட்டங்களை அமீரகம் நடத்துகிறது. இந்த மூன்று நாட்களுக்கு சிறப்பு ஷாப்பிங் சலுகைகள், வானவேடிக்கைகள் மற்றும் துபாய் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் நடைபெறும்.
