கல்வித் துறை, கலை, அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் தகவல்களில் மனித படைப்பாற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியவற்றை வேறுபடுத்தி காட்டுவதற்கு சிறப்பு குறியீடுகளை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
துபாயின் பட்டத்து இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், உலகின் முதல் மனித – இயந்திர ஒத்துழைப்பு சின்னங்களை (Human–Machine Collaboration Icons) செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
துபாய் ஃபியூச்சர் ஃபவுண்டேஷன் (Dubai Future Foundation) இதை உருவாக்கியுள்ளது. இதில், ஒரு தகவல், செய்தி அல்லது படைப்பு, எவ்வளவு மனிதர் செயலாற்றலால் உருவானது மற்றும் எவ்வளவு செயற்கை நுண்ணறிவால் உருவானது என்பதைக் காட்டும் ஐந்து முக்கிய அடையாளங்கள் உள்ளன.
5 முக்கிய அடையாளங்கள்:
- முழுமையாக மனிதர் – AI உதவி இல்லாமல் மனிதர்களால் உருவாக்கப்பட்டது.
- மனிதர் தலைமையிலானது – மனிதர்கள் உருவாக்கி, AI மூலம் மேம்படுத்தப்பட்டது.
- AI உதவி – மனிதர்களும் AI-யும் இணைந்து உருவாக்கியது.
- AI தலைமையிலானது – AI உருவாக்கி மனிதர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டது.
- முழுமையாக AI – மனிதனின் பங்களிப்பின்றி முழுவதும் AI-யால் உருவாக்கப்பட்டது.
செயல்பாட்டின் அடிப்படையில் துணைப் பிரிவுகள்
கூடுதலாக ஒன்பது செயல்பாட்டு சின்னங்களும் உள்ளன. இவை மனித – செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு எந்தப் பகுதியில் நிகழ்ந்தது என்பதைக் குறிக்கின்றன. இதில் யோசனை உருவாக்கம், இலக்கிய ஆய்வு, தரவு சேகரிப்பு, தரவு பகுப்பாய்வு, தரவு விளக்கம், எழுதுதல், மொழிபெயர்ப்பு, காட்சி வடிவமைப்பு மற்றும் வடிவமைப்பு போன்ற பகுதிகள் அடங்கும்.
இது படங்கள் மற்றும் வீடியோ வெளியீடுகள் உட்பட பல்வேறு துறைகள், தொழில்கள் மற்றும் உள்ளடக்க வடிவங்களில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய குறியீடுகளின் நோக்கம்:
செயற்கை நுண்ணறிவின் (AI) பங்கு அதிகரித்து வரும் இக்காலத்தில், ஆராய்ச்சி, கல்வி, கலை மற்றும் அறிவுசார் உள்ளடக்கங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதே இதன் நோக்கம்.
இளவரசர் பதிவு:
இது குறித்து துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், “உலகில் முதல் முறையாக மனித – இயந்திர ஒத்துழைப்புக்கான குறியீடுகளை (Human-Machine Collaboration Icons) நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.
ஆராய்ச்சிகள், வெளியீடுகள் மற்றும் படைப்புகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் ஒரு வகைப்பாடு அமைப்பு இது.
