துபாய் மெட்ரோவில் புதிய AI தொழில்நுட்பம்; இதனால் என்னென்ன பலன்கள் தெரியுமா?

துபாய் மெட்ரோவின் செயல்பாடு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் முயற்சியாக ARIIS என்ற AI தொழில்நுட்பத்தை RTA அறிமுகம் செய்துள்ளது.

ARIIS என்ற AI தொழில்நுட்பம்

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தானியங்கி ரயில்வே உள்கட்டமைப்பு ஆய்வு அமைப்பு (ARIIS), போக்குவரத்துத் துறையில் சமீபத்திய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான முன்னோடி செயல்பாடாக உள்ளது. இந்த புதிய முயற்சி துபாய் மெட்ரோவின் செயல்பாடு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் என RTA தெரிவித்துள்ளது. 

அதிநவீன சென்சார்கள், லேசர்கள் மற்றும் 3D கேமராக்கள் பொருத்தப்பட்ட அதிநவீன ரோபோடிக் தளமான ARIIS, மெட்ரோ செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்காமல் ரயில் பாதைகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பை ஆய்வு செய்யும் திறன் கொண்டது.

மெட்ரோவில் AI தொழில்நுட்பத்தின் பலன்கள்

இந்த ARIIS தொழில்நுட்பத்தால் மெட்ரோ பணிகளில் மனிதவள மற்றும் இயந்திரங்களின் தேவைகள் 40% வரை குறையும். மேலும் பராமரிப்பு செலவுகள் 75% வரை குறையும். அதேபோல் ஆய்வுகளுக்கான தேவையான நேரம் 40% வரை குறையும், உள்கட்டமைப்பு மதிப்பீடு 40% வரை மேம்படும் என RTA தகவல். ARIIS தொழில்நுட்பம் மெட்ரோ ரயில் தடத்தின் விரிசல்கள், தேய்மானம் மற்றும் விலகல்கள் போன்றவற்றின் தரவுகளை சேகரித்து, பின்னர் அதை AI வழிமுறைகளைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்து முடிவுகளை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு வெளியிடும். இந்த அணுகுமுறை மெட்ரோவின் உள்கட்டமைப்பு நிலைத்தன்மையை மேம்படுத்துவதோடு அதன் சேவை தரத்தையும் மேம்படுத்தும்.

விரிவுபடுத்தப்படும் ARIIS தொழில்நுட்பம்

தற்போது குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டும் ARIIS தொழில்நுட்பம் செயல்பாட்டில் உள்ள நிலையில் இதன் செயல்திறனை பொறுத்து கூடுதல் மெட்ரோ வழித்தடங்களில் படிப்படியாக இந்த AI தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்பட்டு வருவதாக RTA குறிப்பிட்டுள்ளது. 

டிராம் போன்ற பிற போக்குவரத்து முறைகளுக்கு, அவற்றின் உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுத் தேவைகளைப் பொறுத்து, ARIIS தொழில்நுட்பம் அல்லது இதே போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்த RTA திட்டமிட்டுள்ளது. 

TAGGED: