உலகின் உயரமான மெட்ரோ; துபாயில் அமையவிருக்கும் நீல வழித்தட மெட்ரோ குறித்த முழு தகவல்கள்!

துபாய் தனது போக்குவரத்து வலையமைப்பில் புதிதாக நீல நிற வழித்தட (Blue Line)  மெட்ரோ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2029-ல் திறக்கவிருக்கும் இந்தப் புதிய மெட்ரோ வழித்தடம், ஏற்கனவே உள்ள சிவப்பு மற்றும் பச்சை வழித்தடங்களுடன் இணைந்து, துபாயின் மொத்த ரயில் நெட்வொர்க்கை 131 கி.மீ ஆக விரிவுபடுத்தும்.

நீல நிற வழித்தட மெட்ரோ:

கடந்த 2005ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட  சாலை மற்றும் போக்குவரத்து   ஆணையத்தின் சார்பில் படிப்படியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் பஸ், டாக்ஸி, மெட்ரோ ரெயில் மற்றும் படகு போக்குவரத்துகள் தொடங்கப்பட்டன. கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி கூடுதலாக டிராம் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.

கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் இன்றும் துபாய் போக்குவரத்தில் ஒரு அங்கமாக திகழ்கிறது. 89.6 கி.மீ  நீளத்தில் சிவப்பு, பச்சை நிற வழித்தடங்கள் என பிரிக்கப்பட்டு  மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது புதிதாக நீல நிற வழித்தட (Blue Line)  மெட்ரோ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய நீல வழித்தடத்தில் முதலாவது மெட்ரோ ரெயில் நிலைய பணிகளுக்கு துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

நீல நிற வழித்தடத்தின் விரிவான விவரங்கள்:

30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட இருக்கும் இந்த சேவை 15.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்க பாதையிலும், 14.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலத்திலும் செல்லும். மேலும் இதில் 14 நிலையங்கள் அமையும். இது சிவப்பு வழித்தடத்தை சென்டர்பாயிண்ட் நிலையத்திலும், பச்சை வழித்தடத்தை க்ரீக் நிலையத்திலும் இணைக்கும்.

நீல நிற முதல் வழித்தடம்:

21 கி.மீ நீள தண்டவாளத்தில், 10 நிலையங்கள் அமையும். க்ரீக் நிலையத்தில் இருந்து தொடங்கி, துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி, ரஸ் அல் கோர், இன்டர்நேஷனல் சிட்டி 1 (அண்டர்கிரவுண்ட் இன்டர்சேஞ்ச்), இன்டர்நேஷனல் சிட்டி 2 & 3, துபாய் சிலிக்கான் ஓயஸ் வழியாக அகாடமிக் சிட்டி வரை அமையும்.

நீல நிற இரண்டாவது வழித்தடம்:

9 கி.மீ நீள தண்டவாளத்தில், 4 நிலையங்கள் உள்ளன.  சிவப்பு வழித்தடத்தின் சென்டர்பாயிண்ட் நிலையத்தில் இருந்து மிர்திஃப், அல் வார்கா வழியாக இன்டர்நேஷனல் சிட்டி 1 இன்டர்சேஞ்ச் நிலையத்தில் முடிகிறது.

முக்கிய அம்சங்கள்:

  • உலகின் உயரமான மெட்ரோ நிலையமாகும், 74 மீட்டர் உயரத்தில் அமைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • துபாய் க்ரீக்கைக் கடக்கும் முதல் மெட்ரோ வழித்தடம்.
  • துபாய் விமான நிலையத்தை 20 நிமிடங்களில் இணைக்கும்.
  • பயண நெரிசலை 20% குறைக்கும்.
  • 2040க்குள் தினசரி 3.2 லட்சம் பயணிகள் பயன்படுத்துவர்.
  • பசுமைக் கட்டிட தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது.

பொருளாதார நன்மைகள்:

2040 ஆம் ஆண்டுக்குள், துபாய் மெட்ரோ நீல வழித்தடத் திட்டம் செலவு-பயன் விகிதத்தில் 2.60 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, செலவிடப்படும் ஒவ்வொரு AED 1-க்கும், AED 2.60 மதிப்பிலான பலன்கள் கிடைக்கும். 2040 ஆம் ஆண்டிற்குள் எதிர்பார்க்கப்படும் மொத்தப் பலன்கள் AED 56.5 பில்லியனை தாண்டும். இந்த நன்மைகளில் நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்பு, விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைப்பு, மற்றும் கார்பன் உமிழ்வு குறைப்பு ஆகியவை அடங்கும்.

நீல வழித்தடம் நிலையங்களுக்கு அருகிலுள்ள நிலம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மெட்ரோ வழித்தடம் துபாயில் பசுமைக் கட்டிடத் தரங்களுடன் முழுமையாக இணங்கும் முதல் போக்குவரத்துத் திட்டம் ஆகும். இது பிளாட்டினம் வகை சான்றிதழை (Platinum Category certification) பெற்றுள்ளது.

TAGGED: