உலகின் மிக கனமான ஆடையாக கின்னஸ் சாதனை படைத்த ‘Dubai Dress’!

சுமார் 10.0812 கிலோகிராம் எடையுள்ள துபாய் ஆடை எனப்படும் தங்க ஆடை உலகின் மிக கனமான தங்க ஆடையாக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

துபாய் ஆடை:

உலகின் மிக கனமான தங்க ஆடையாக, துபாய் ஆடை (Dubai Dress) கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. 10.0812 கிலோகிராம் எடையுள்ள இந்த ஆடையின் சுமார் AED 4.6 மில்லியன் ஆகும்.

அல் ரோமைசான் கோல்ட் அண்ட் ஜுவல்லரி கம்பெனி (Al Romaizan Gold and Jewelry Company) தயாரித்த இந்த ஆடை, 21 கேரட் தங்கத்தால் செய்யப்பட்டது. ஷார்ஜா எக்ஸ்போவில் நடந்த 56வது மத்திய கிழக்கு கடிகாரம் மற்றும் நகை கண்காட்சியின் (Middle East Watch and Jewelry Exhibition) போது, அதற்கான கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் அல் ரோமைசான் நிறுவனத்திடம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. 

ஆடையின் சிறப்பம்சங்கள்

இந்த தனித்துவமான படைப்பு, எமராட்டியின் கைவினைத்திறனை உலக அரங்கில் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது.  ‘துபாய் ஆடை’ நான்கு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.

தங்க கிரீடம் (Crown) – 398 கிராம்

கழுத்தணி (Necklace) – 8,810.60 கிராம்

காதணிகள் (Earrings) – 134.1 கிராம்

ஹெயார் (Heyar Piece) – 738.5 கிராம்

அல் ரோமைசான் நிறுவனத்தின் வடிவமைப்பாளர்கள், பழங்கால அமீரகப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆடையை வடிவமைத்துள்ளனர். இதில் பாரம்பரியத்தின் அம்சங்கள் மற்றும் நவீனத்தின் நுணுக்கங்கள் கலந்துள்ளன.

கைவினைக் கலைஞர்கள் தங்கள் தனிப்பட்ட திறமையைக் கொண்டு, துல்லியமான வேலைப்பாடுகளுடன், வண்ணமயமான விலையுயர்ந்த கற்களையும் இதில் பதித்துள்ளனர். இது அமீரக கலாச்சாரத்தை தங்கம் மற்றும் நகைகள் மூலம் சொல்லும் ஒரு கலைப் பொருளாக திகழ்கிறது.

இந்த சாதனை குறித்து அந்நிறுவனத்தின் மண்டலத் துணை மேலாளர் மொஹ்சென் அல் தைபானி கூறுகையில், “இந்த படைப்பு, உலகத் தலைமைத்துவத்தை அடைய வேண்டும் என்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் லட்சியத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும், தங்கம் மற்றும் நகை ஆர்வலர்களுக்கு துபாய் ஒரு முதன்மை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது” என்றார்.