டாக்ஸிகளில் இனி உங்க தாய்மொழியிலேயே பேசலாம்; மொழிப்பெயர்ப்பு வசதியை கொண்டு வந்த துபாய் டாக்ஸி நிறுவனம்!

பயணிகள் மற்றும் ஓட்டுநருடன் ஊடாடும் வகையில் மின்சார டாக்ஸியில் AI மொழிபெயர்ப்பு வசதியை துபாய் டாக்ஸி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நீங்கள் எந்த நாட்டவராக இருந்தாலும், உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்யலாம். 

டாக்ஸிகளில் மொழிப்பெயர்ப்பு வசதி: 

துபாயில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் மின்சார டாக்ஸிகளில் பயணிகள் இனி எந்த மொழியில் பேசினாலும், அது உடனுக்குடன் மொழிபெயர்க்கப்படும். இதனால், பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் தங்கள் தாய்மொழி எதுவாக இருந்தாலும் எளிதாகப் பேசிக்கொள்ள முடியும்.

கியா மோட்டார்ஸ் உடன் இணைந்து புதிய PV5 காரில் செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு வசதியை பயன்படுத்த துபாய் டாக்ஸி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

வாகன வடிவமைப்பு 

டாக்ஸியின் ஸ்மார்ட் மீட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பில் பொருத்தப்படும் AI மொழிபெயர்ப்பு கருவி பயணிகள் மற்றும் ஓட்டுநரின் குரலைக் கண்டறிந்து மொழிபெயர்த்து பதிலளிக்கும். மேலும் டிஜிட்டல் திரையில் கட்டணம் மற்றும் இதர விவரங்கள் திரையிடப்படும். 

துபாய் டாக்ஸி கம்பெனி தனது அனைத்து டாக்ஸிகளையும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக மாற்றி வருகிறது.  இந்த  டாக்ஸிகளில், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மொழிபெயர்ப்பு வசதி கட்டமைக்கப்பட்டுள்ளது. இது பயணிகள் பேசுவதை உடனுக்குடன் ஓட்டுநருக்கு மொழிபெயர்த்துத் தெரிவிக்கும்.

மொழிபெயர்ப்பு கருவி, டாக்ஸியின் ஸ்மார்ட் மீட்டர் மற்றும் தகவல் அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. பயணத்தின் அனைத்து விவரங்கள், கட்டணம் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் இந்த ஒரே திரையில் தெரியும்.

இந்த டாக்ஸிகளில் உள்ள ஸ்மார்ட் மீட்டர், துபாய் டாக்ஸி நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரடி தரவுகளை அனுப்பும். வண்டியில் இருக்கும் நான்கு கேமராக்கள் ஓட்டுநரின் நடத்தையையும், பயணிகளின் பாதுகாப்பையும், ஓட்டுநரின் சோர்வையும் கண்காணிக்கும்.

ஓட்டுநர் சோர்வாக இல்லாமல், விதிமுறைகளுக்கு இணங்கி சரியாக ஓட்டுகிறாரா என்பதை  Fatigue Camera உறுதி செய்யும். இந்த புதிய PV5 ரக வாகனங்கள் கியா (Kia) நிறுவனத்துடன் இணைந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மின்சாரத்தில் இயங்குவது மட்டுமின்றி, இந்த வாகனங்களின் உட்புறத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. துபாயின் “பசுமை போக்குவரத்து உத்தி 2030” (Green Mobility Strategy 2030)-ன் ஒரு பகுதியாக இந்த மாற்றம் செய்யப்படுகிறது.

2027-ஆம் ஆண்டுக்குள் அனைத்து டாக்ஸிகளும் ஹைப்ரிட், மின்சாரம் அல்லது ஹைட்ரஜன் வாகனங்களாக மாற்றப்படும் என சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (Roads and Transport Authority) இலக்கு நிர்ணயித்துள்ளது.

TAGGED: