துபாயின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமான Dubai Fountain, ஐந்து மாதங்களுக்குப் பிறகு, நாளை (அக்.1) மீண்டும் திறக்கப்படவுள்ளது.
துபாயின் மற்றொரு அடையாளம்
புர்ஜ் கலீஃபாவைப் போலவே, Dubai Fountain-னும் துபாயின் அடையாளமாக மாறியுள்ளது. இங்கு செல்பி எடுக்காத சுற்றுலாப் பயணிகளை பார்ப்பதே கடினம். அந்த அளவு புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் கடந்த ஐந்து மாதங்களாக பராமரிப்புப் பணிகள் காரணமாக மூடப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மூடப்பட்ட இந்த Fountain-ஐ அக்டோபர் 1, 2025 -இல் மீண்டும் திறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீரூற்றின் சிறப்பு
இந்த நீரூற்றில் ஆயிரக்கணக்கான விளக்குகள், பல புரொஜெக்டர்கள் மற்றும் 22,000 காலன் நீர் மற்றும் நீரை வானில் பீய்ச்சும் வாட்டர் ஜெட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எப்போது திறக்கப்பட்டது?
Dubai Fountain 2009 மே 8ஆம் தேதி, துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பெயருக்கு பின்னுள்ள கதை
“Dubai Fountain” என்ற பெயருக்கு ஒரு கதை உள்ளது. கிட்டத்தட்ட 100 நாடுகளிலிருந்து 4,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இதற்குப் பெயர் வைக்கும் போட்டியில் கலந்துகொண்டு இதற்கான பெயரை வழங்கினர். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது தான் Dubai Fountain என்ற பெயர்.
‘டவுன்டவுன் துபாயின் இதயத் துடிப்பு’
அமெரிக்காவைச் சேர்ந்த WET Design நிறுவனம் வடிவமைத்த இந்த ஃபவுண்டன், உலகின் மிகப்பெரிய நடனமாடும் நீரூற்றாகும். 2013-இல், Dubai Fountain பகுதி 275 மீட்டர் வரை விரிவுபடுத்தப்பட்டது. 2025 பிப்ரவரி மாதத்தில், Emaar நிறுவனம் இந்த Fountain -ஐ பராமரிப்புப் பணிகள் காரணமாக மூடிய நிலையில், முழுவதும் புதுப்பிக்கப்பட்டு, தற்போது, மேம்படுத்தப்பட்ட ஒளி மற்றும் ஒலி அமைப்புகளுடன் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் தயாராகியுள்ளது.
எப்போது பார்க்கலாம்:
துபாய் நீரூற்றில் (Dubai Fountain), திங்கள் முதல் வியாழன் வரை பகல் நேர நிகழ்ச்சிகள் மதியம் 1:00 மணிக்கும் 1:30 மணிக்கும் நடைபெறும், மேலும் வெள்ளிக்கிழமைகளில் இது மதியம் 2:00 மணிக்கும் 2:30 மணிக்கும் நடக்கும். தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை, ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியிலும் மாலை நேர நிகழ்ச்சிகளை நீங்கள் கண்டு களிக்கலாம்.
இரண்டாம் கட்ட மேம்பாடு:
அடுத்த கட்ட புதுப்பிப்புப் பணிகள் 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (Q2 2026) நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டாம் கட்டப் பணியில், பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் உயர்த்தும் வகையில், தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றலை இணைக்கும் புதிய, புதுமையான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
துபாயின் அழகு
ஐந்து மாதங்கள் கழித்துத் திறக்கப்படும் துபாயின் இந்த அழகைக் காண கண் கோடி வேண்டும் என்பது போல, துபாய் வாசிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளும் இதற்காகவே காத்திருக்கின்றனர்.
