சீரமைப்பு பணி மேற்கொள்வதற்காக துபாய் நீரூற்று ஐந்து மாதங்களுக்கு மூடப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
துபாய் மால் மற்றும் புர்ஜ் கலீஃபா அருகே downtown துபாயில் அமைந்துள்ள துபாய் நீரூற்று (Dubai Fountain), ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த நீரூற்று 152 மீட்டர் உயரம் வரை தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறது.
இது 50 மாடி உயரமான கட்டிடத்தை விடவும் உயரமாகும். 6 ஆயிரத்து 600 விளக்குகள் மற்றும் 25 வண்ண ப்ரொஜெக்டர்கள் மூலம் ஒளிரும் இந்த துபாய் நீரூற்றை கலிபோர்னியாவைச் சேர்ந்த WET டிசைன் நிறுவனம் வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த நீரூற்றைக் காண வருகின்றனர். இந்த நிலையில் மேம்பட்ட நடன அமைப்பு மற்றும் மேம்பட்ட ஒளி மற்றும் ஒலி அமைப்பு உள்ளிட்ட விரிவான புதுப்பித்தலுக்காக துபாய் நீரூற்று வரும் மே மாதம் முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என்று எமார் பிராபர்ட்டீஸ் நேற்று தெரிவித்துள்ளது.
எமார் நிறுவனத்தின் நிறுவனர் மொஹமட் அலப்பார், “துபாய் நீரூற்று மேம்படுத்தல் பணி மே மாதம் தொடங்கும். சீரமைப்பு பணி முடிந்த பின், துபாய் நீரூற்று மேலும் அழகாக இருக்கும். துபாய் நீர்வீழ்ச்சி என்பது ஒரு காட்சி மட்டுமல்ல, அது துபாயின் உள்ளத்தைக் காட்டும் ஒரு பிரதிபலிப்பாகும்.
அங்கு கலை, புதுமை மற்றும் உணர்வு சரியான இணக்கத்துடன் ஒன்றிணைகின்றன. இந்த முக்கியமான அடையாளத்தை மேம்படுத்துவதோடு, நாம் மனிதர்களை இணைக்கும், அதிசயத்தை ஊக்குவிக்கும் மற்றும் காலத்தின் சோதனையை தாங்கும் அனுபவங்களை தொடர்ந்தும் உருவாக்கி கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார்.
