துபாயில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள், ஜனவரி 9, 2026 முதல் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 11:30 மணிக்குள் முடிவடையும் என்று துபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம்(KHDA) அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெள்ளிக்கிழமை மதிய தொழுகை நேரமானது, தற்போதுள்ள மதியம் 1:15 மணியிலிருந்து 12:45 மணிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த மாற்றம் ஜனவரி 2, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு இணங்க, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமமின்றி தொழுகையில் பங்கேற்க ஏதுவாக பள்ளிகளின் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பு
பள்ளி முடியும் நேரம்: ஜனவரி 9, 2026 முதல், வெள்ளிக்கிழமைகளில் அனைத்து தனியார் பள்ளிகளும் மதியம் 11:30 மணிக்குள் பாடங்களை நிறைவு செய்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகள்: 6-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு (Grade 6 / Year 7), வெள்ளிக்கிழமைகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த பள்ளிகள் அனுமதி பெறலாம். இதற்குப் பெற்றோர்களிடம் கலந்தாலோசிப்பதும், துபாய் கல்வித் துறையிடம் முன் அனுமதி பெறுவதும் கட்டாயமாகும்.
மற்ற நாட்களில் மாற்றம் இல்லை: திங்கள் முதல் வியாழன் வரையிலான மற்ற பள்ளி வேலை நேரங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள்
இந்த புதிய நேர மாற்றத்தைச் செயல்படுத்தும்போது, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதில் KHDA உறுதியாக உள்ளது.
பள்ளிகள் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்:
- குறைவான நேரத்திலும் பாடத்திட்டத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மன நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
- பள்ளி முடிந்த பிறகு, பெற்றோர்கள் வந்து அழைத்துச் செல்லும் வரை மாணவர்களுக்குப் பாதுகாப்பான மேற்பார்வையை உறுதி செய்ய வேண்டும்.
ஏன் இந்த மாற்றம்?
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெள்ளிக்கிழமை மதிய தொழுகை நேரம் 1:15 மணியிலிருந்து 12:45 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. மக்களின் வேலைப்பளுவைக் குறைக்கவும், குடும்பத்துடன் நேரம் செலவிடவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
