15 ஆண்டுகள் சேவையாற்றிய செவிலியர்களுக்கு கோல்டன் விசா!

துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 15 ஆண்டுகளுக்கும் மேலாக துபாய் ஹெல்த் அமைப்பில் பணியாற்றிய செவிலியர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவைக்கு அங்கீகாரம்:

செவிலியர்கள் மருத்துவத்துறையில் ஆற்றும் மனிதாபிமானச் சேவைகளுக்கும், சுகாதாரத் தரத்தை மேம்படுத்த அவர்கள் ஆற்றிய முக்கிய பங்களிப்புக்கும் அங்கீகாரம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

“செவிலியர்கள் மருத்துவ அமைப்பின்  முதன்மைப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். ஆரோக்கியமான சமூகக் கனவை நனவாக்க, அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பு தினமும் போற்றத்தக்கது.” என  ஷேக் ஹம்தான் தெரிவித்தார். 

 சர்வதேச செவிலியர் தினத்திற்கான சிறப்பு அறிவிப்பு:

இந்த அறிவிப்பு, மே 12 சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி வெளியாகியுள்ளது. இது, சுகாதாரத்துறையினருக்கு நிலையான ஆதரவையும், ஊக்கத்தையும் வழங்குவதாகும்.

இதேபோல், 2021-ல் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய  பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும், 2024 உலக ஆசிரியர் தினத்தன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும்  கோல்டன் விசா வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGGED: