நூர் தீபத் திருவிழா 2025: வாணவேடிக்கைகளுடன் ஜொலிக்கப்போகும் துபாய்

தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் துபாயில் உள்ள Souk Al Seef பகுதியில் நூர் தீபத் திருவிழா நடைபெற உள்ளது.

நூர் தீபத் திருவிழா 

துபாயில் தீபாவளி என்பது குடும்பங்கள் கொண்டாடும் சாதாரண பண்டிகையாக அல்லாமல், மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. எதிர்வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நூர் தீப திருவிழாவை முன்னிட்டு Souk Al Seef பகுதியை வண்ண விளக்குகளால் ஒளிரப் போகிறது. 

இத்திருவிழாவில் வாணவேடிக்கை, இசை நிகழ்ச்சிகள் என மூன்று நாட்களுக்கு களைகட்டும் இந்த விழாவில் இந்தியர்கள் மட்டுமல்லாமல் எமிராட்டிகள், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்கள் என பல்வேறு நாட்டினர் பங்கேற்பர். 

நூர் தீபத் திருவிழாவின் சிறப்புகள்

இது போன்ற திருவிழாக்கள் வெறும் தனிப்பட்ட மகிழ்ச்சிக்கானது மட்டுமல்லாமல் மனிதர்களிடையே இணக்கமான உறவை ஏற்படுத்துகின்றன. மேலும் துபாயின் சுற்றுலா வளர்ச்சிக்கும் இது போன்ற திருவிழாக்கள் பெரிதும் பங்களிக்கின்றன. கலைநிகழ்ச்சிகளைக் காணவும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வருகை தருகின்றனர். 

இந்தத் திருவிழா நடைபெறும் Souk Al Seef பகுதி துபாய் க்ரீக் கரையோரமாக அமைந்துள்ளது. துபாய் நகரின் பழமையான இடங்களில் ஒன்றான இங்கு இருபுறமும் கடைகள் நிறைந்திருக்கும். விழாவைக் காண மக்கள் அதிகமானோர் வருவார்கள் என்பதால் அங்குள்ள அனைத்துக் கடைகளுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும். இதனால் வியாபாரிகள் பயனடைகின்றனர். 

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் துபாய்

பல்வேறு நாட்டினரை சேர்ந்த மக்கள் துபாய்க்கு வருகைபுரிவதால், அவர்களின் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் விடுமுறை அல்லாத காலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை துபாயில் அதிகமாகக் காணப்படுகிறது. அந்த வகையில் தான் இந்திய கலாச்சாரத்தை போற்றும் வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நூர் தீப விழா நடத்தப்படுகிறது.