துபாயில் மறைமுக கட்டணங்களுக்கு தடை; ஆன்லைன் உணவு விநியோக சேவைகளுக்கு விதிமுறைகள் அறிமுகம்!

மறைமுக  கட்டணங்களை நீக்கி வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும் நோக்கில்,  உணவு விநியோக சேவைகளுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது துபாயின் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நியாய வர்த்தகக் கழகம். 

ஆன்லைன் உணவு விநியோக சேவைகளுக்கு விதிமுறைகள்:  

துபாயில் ஆன்லைன் உணவு விநியோக சேவைகளுக்கு புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி உணவு டெலிவரி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து மறைமுகமான கட்டணங்களை வசூலிக்க முடியாது. நுகர்வோரைப் பாதுகாக்கவும், துறையில் நேர்மையைக் கடைப்பிடிக்கவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகள்: 

  • டெலிவரி மற்றும் சேவைக்கான அனைத்துக் கட்டணங்களும் வாடிக்கையாளருக்குத் தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும்.
  • ஆர்டர் செய்த பிறகு, முன்கூட்டியே சொல்லப்படாத கூடுதல் கட்டணங்களைச் சேர்க்கக்கூடாது.
  • அனைத்து கட்டணங்கள், உணவுப் பொருள்களின் விலை, டெலிவரி கட்டணம் (இடத்திற்கு இடம் மாறுபடுமா என்பது உட்பட), சேவை கட்டணங்கள் மற்றும் வரிகள் ஆகியவை வாடிக்கையாளர் பணம் செலுத்துவதற்கு முன் தெளிவாகக் காட்டப்பட வேண்டும்.
  • சந்தா சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், கூடுதல் டெலிவரி கட்டணம், உயர்ந்த கமிஷன், அல்லது மறைமுக கட்டணங்கள் மூலம் சந்தா சலுகைகளின் செலவை உணவகங்களுக்கு சுமத்தக் கூடாது.
  • ‘பிரத்யேகமானது’ (Exclusive) என்ற சொல் உண்மையிலேயே அந்த தளத்தில் மட்டுமே கிடைக்கும் சலுகைகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். அவை வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தக்கூடாது.
  • தகவல்கள் எல்லா டிவைஸ் (கைபேசி, டேப்லெட், கணினி) மற்றும் ஆப்பிலும் (ஆண்ட்ராய்டு, iOS) ஒரே மாதிரியாக காட்டப்பட வேண்டும். அதில் எந்த வித்தியாசமும் இருக்கக் கூடாது.

இந்த விதிமுறைகளை மீறினால், அது நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகக் கருதப்படும். இந்த மாற்றங்கள், துபாயின் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நியாய வர்த்தகக் கழகத்தால் (Dubai Corporation for Consumer Protection and Fair Trade – DCCPFT) வெளியிடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் ஆன்லைன் உணவு டெலிவரி துறையின் வளர்ச்சிக்கு உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.