அடுத்த வாரம் முதல் துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்திற்கு செலுத்த வேண்டிய அனைத்து சேவைக் கட்டணங்களையும், தவணை முறையில் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயே போக்குவரத்து கட்டணங்களில் தவணை முறையை அறிமுகப்படுத்தும் முதல் எமிரேட் ஆகும். இதற்காக, RTA நிதி சார்ந்த சேவைகள் வழங்கும் செயலியான Tabby-யுடன் கைகோர்த்துள்ளது, இதனை பொதுமக்கள் துபாய் முழுக்க பொருத்தப்பட்டுள்ள Smart Kiosk இயந்திரங்களை பயன்படுத்தி தேவையான தவணை முறைத் திட்டங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று ஆணைய டிஜிட்டல் சேவைகளின் இயக்குனர் மீரா அல் ஷேக் தெரிவித்தார்.
தற்போது துபாய் முழுக்க சுமார் 30 Smart Kiosk இயந்திரங்கள் உள்ளன, இந்த இயந்திரம் வழங்கும் பிற சேவைகளான ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை, ஏற்கனவே காப்பீடு செலுத்தி இருக்கும் பட்சத்தில் 30 நொடிகளில் முடித்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Smart Kiosk இயந்திரம் மூலம் RTA-வின் அனைத்து சேவைகளையும் பெற முடியும், அந்த இயந்திரத்தில் உள்ள Tabby எனும் செயலியை பயன்படுத்தி வாகன உரிமம், ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை புதுபிக்கும் கட்டணங்களையும், அபராத கட்டணங்களையும் செலுத்த நான்கு தவணை வரை அனுமதிக்கும், தவணை முறை திட்டத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
40,000-க்கும் மேம்பட்ட உலகளாவிய நிறுவனங்கள் Tabby-யின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டணங்கள் தொடர்பான தங்களின் சேவைகளை மேம்படுத்தி வருகின்றன. இது தற்போது சவூதி அரேபியா, அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இயங்கி வருகின்றது.
இன்னும் ஒரு வாரத்தில் இந்த தவணை முறை சேவை துவங்கும் என எதிர்பார்ப்பதாகவும், வருங்காலத்தில் இதனை மற்ற டிஜிட்டல் தளங்களிலும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
